Skip to content

தொடர் கனமழை….. நிரம்பும் நிலையில் வைகை அணை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த 1 வாரத்துக்கும் மேலாக தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம்  உள்ளது.  நேற்று மாலை 6 மணிக்கு அணையின் நீர்மட்டம் 68.50 அடியாக இருந்த நிலையில் இன்று காலையில் அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியது.

இதனைத் தொடர்ந்து வைகை அணையில் இருந்து 3 முறை சங்குகள் ஒலிக்கப்பட்டு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அணைக்கு வினாடிக்கு 2693 கன அடி நீர் வருகிறது. தற்போது அணையில் இருந்து 69 கன அடி மட்டும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5562 மி.கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியவுடன் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் மதகுகள் வழியாக வெளியேற்றப்படும்.

இதன் காரணமாக வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே கரையோரம் இருந்த மக்கள் அகற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அணையில் இருந்து தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டால் வெள்ளப்பெருக்கு உருவாகும் என்பதால் கால்நடைகளையும் அங்கிருந்து அகற்றுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

கனமழை காரணமாக வருசநாடு அருகே உள்ள மேகமலை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை காணலாம். இதே போல் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 126.85 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 127.55 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1855 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டு குடிநீர் தேவைக்காக மட்டும் 105 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4169 மி.கன அடியாக உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.60 அடியாக உள்ளது. வரத்து 122 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 368.39 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.67 அடியிலேயே நிற்கிறது. இதனால் அணைக்கு வரும் 299 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையால் 500 குளங்கள் பாதியளவு நிரம்பின தொடர்மழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் இன்று 6-ம் நாளாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் சுருளி அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அணைப்பிள்ளையார் அருவி, மேகமலை அருவியிலும் தண்ணீர் அதிக அளவு செல்வதால் அங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மழை பெய்வதால் மலைச்சாலையில் விபத்து ஏற்படுவதைத் தடுக்க வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!