தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்குக்கான பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வேட்பாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு இறுதி கட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் வடிவேலு காமெடியை வைத்து மத்திய அரசையும், தமிழக ஆளுநரையும் விமர்சனம் செய்தார்.
“வடிவேலு காமெடியில், ‘வாம்மா மின்னல்…’ என்ற காமெடியில் வருவதுபோல ஆளுநர் இருக்கிறார். எப்போது வருவார் எப்போது போவார் என்றே தெரியவில்லை” என்று ஆளுநரை கலாய்த்தார் உதயநிதி.
அதேபோல மத்திய அரசையும் விமர்சிக்க வடிவேலு காமெடியை பயன்படுத்தினார். மதுரையில் எய்ம்ஸ் கட்டப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்ததைச் சுட்டிக்காட்டிய அவர், “வடிவேலு காமெடியில், ‘என்னோட கிணத்தைக் காணும்’ என்று சொல்வதைப் போல மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் காணோம்” என்று கிண்டலடித்தார்.
மேலும் பேசிய அவர், “மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு எதையுமே செய்யவில்லை. தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு இதுவரை ஒருபைசா கூட வெள்ள நிவாரணம் வழங்கவில்லை. புயல்-மழை நிவாரணத்தைக்கூட வழங்காமல் பாஜக அரசு நம்மை வஞ்சித்து வருகிறது” என்றார்.