தமிழகத்தை சேர்ந்த வி.கார்த்திகேய பாண்டியன் (வி.கே.பாண்டியன்) 2000ம் பேட்சை சேர்ந்த ஒடிசா கேடர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவார். சமீபத்தில், அவர் அரசு பொறுப்பை உதறி விட்டு, நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜூ ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் என ஒரிசாவில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் ‘வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை. ஒடிசா மக்கள் அதனை முடிவு செய்வார்கள்’ என ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் மறுத்து விட்டார். குறிப்பாக நவீன் பட்நாயக்கிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு விட்டதாகவும் விகே பாண்டியன் முதல்வராக முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் ஓடிசாவை தமிழர் எப்படி ஆட்சி செய்ய முடியும் என்றும் பாஜ கடுமையாக பிரச்சாரம் மேற்கொண்டது, இத்தகைய சூழ்நிலையில் ஒடிசா சட்டமன்ற தேர்தலில் பிஜூ ஜனதா தளம் தோல்வியை தழுவியது. இந்நிலையில், தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக நவீன் பட்நாயக்கின் உதவியாளர் வி.கே. பாண்டியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்… ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு உதவி புரியவே அரசியலுக்கு வந்தேன். ஐ.ஏ.எஸ்., பதவியை துறந்து பிஜூ ஜனதா தளத்தில் இணைந்தேன். பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. மூதாதையர்களின் சொத்துகள் தான் என் வசம் உள்ளன. நான் ஐ.ஏ.எஸ்., பணியில் சேரும் போது இருந்த சொத்துக்களே, இப்போதும் என்னிடம் உள்ளன. மக்களுக்கு சேவையாற்றவே ஐ.ஏ.எஸ்., பணிக்கு வந்தேன். அதன் மூலம் ஒடிசா மக்களின் அன்பை பெற்றேன். கொரோனா காலத்தில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தோம். இவ்வாறு வி.கே.பாண்டியன் கூறியுள்ளார்.