உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார், ரிஷிகேஷ், டேராடூன் கோவில்களில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஹரித்துவார் தக் ஷ் பிரஜாபதி மந்திர், ரிஷிகேஷ் நீலகண்ட மகாதேவ மந்திர், டேராடூன் தபகேஷ்வர் மகாதேவ மந்திர் ஆகிய கோவில்களை நிர்வகித்துவரும் மகாநிர்வானி பஞ்சாயத்தி அகாரா அமைப்பின் செயலாளர் மகந்த் ரவீந்திர பூரி கூறுகையில், முறையாக ஆடை அணியாத ஆண், பெண் பக்தர்கள் இந்தக் கோவில்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பெண்கள் தங்கள் உடம்பை 80 சதவீதம் மறைக்கும் வகையில் ஆடை அணிந்திருக்க வேண்டும். இந்த ஆடைக் கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வருகிறது என்றார்.
சிலர் கோவிலின் புனிதம் குறித்த உணர்வின்றி ஆடை அணிந்து வருகிறார்கள். இதுகுறித்து கோவில் நிர்வாகத்துக்கு பக்தர்கள் பலர் புகார் தெரிவித்துள்ளனர். அதையடுத்துதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விரைவில், நாடு முழுவதும் எங்கள் அமைப்பின் நிர்வாகத்தின்கீழ் உள்ள அனைத்து கோவில்களிலும் இந்த ஆடைக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.