கரூர் மாநகராட்சி ராயனூரில் நாளை (04.03.2023) காலை 10 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, ரூ.267.43 கோடி மதிப்பீட்டில் 1,22,019 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
தொடர்ந்து கரூர் மாவட்டம் முழுவதும் 12 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தொடங்கி வைக்கிறார்.
மதியம் 12 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து துறைஅலுவலர்களுடன் அமைச்சர் உதயநிதி ஆய்வு நடத்துகிறார்.
மாலை 4.30 மணிக்கு கரூர் பிரேம் மகாலில், முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரிஅளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி பரிசு வழங்குகிறார்.
மாலை 5 மணிக்கு குதிரை எல்லை பந்தயத்தை அமைச்சர் துவக்கி வைத்து பரிசு வழங்குகிறார். 6 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கரூர் கோடாங்கி பட்டி பைபாஸ் ரோட்டில் நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டு திமுக முன்னோடிகளுக்கு அமைச்சர் உதயநிதி பொற்கிழி வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் பங்கேற்கிறார். விழா ஏற்பாடுகளை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி சிறப்பாக செய்துள்ளார்.