விருதுநகர் மாவட்டம் சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட மேல்முறையீட்டு விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இத்திட்ட விதிகளை பூர்த்தி செய்கிற ஒரு மகளிர் கூட, விடுபட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில் பணியாற்றிட வேண்டும் என அரசு அலுவலர்களை கேட்டுக் கொண்டார்.
இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் X தளத்தில், “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், விண்ணப்பம் ஏற்கப்படாதவர்கள், மேல்முறையீட்டு மனுக்களை அளிப்பதற்கான காலம் நேற்று முன்தினத்துடன் முடிவுற்றது; தமிழ்நாடு முழுவதுமிருந்து 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன;இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் – சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் பணிகளை இன்று ஆய்வு செய்தோம்;
அப்போது மேல்முறையீடு செய்திருந்த மகளிரில் மூவரிடம் கைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினோம்; அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை எடுத்துக் கூறிய போது, அதன் நியாயத்தை உணர்ந்து, நாம் கூறியதை ஏற்றுக் கொண்டனர்; கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விதிகளை பூர்த்தி செய்கிற ஒரு மகளிர் கூட விடுபட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில் பணியாற்றிட அரசு அலுவலர்களை கேட்டுக் கொண்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.