தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஆண்டுதோறும் மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ம் தேதி திறக்கப்படும். குறிப்பிட்ட தேதியில் அணை திறக்கப்பட்டால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.
இதுதவிர உளுந்து, எள், வாழை, நிலக்கடலை, மக்காச்சோளம் போன்றவையும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது சம்பா, தாளடி அறுவடைபணி முடியும் தருவாயில் உள்ளது. இந்தநிலையில் கோடை நெல் மற்றும் கோடை உளுந்து சாகுபடி பணியும் நடைபெற்றுள்ளது.
நெல் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும். இந்தநிலையில் சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்கு ரயிலில் 25 வேகன்களில் 1,312 டன்யூரியா உரம் தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் தஞ்சை ரயில் நிலையத்தில் இருந்து இந்த உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கும், தனியார் உர விற்பளை நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.