உ.பி.,யில் முதல்வராக பொறுப்பேற்ற, பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத், 2017-ம் ஆண்டு மாநில அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், அனைவரும், தங்கள், அசையும், அசையா சொத்து விபரங்களை, உடனடியாக சமர்ப்பிக்க உத்தரவிட்டார். இதையடுத்து, பெரும்பாலான அமைச்சர்கள், தங்கள் சொத்து விபரங்களை, சமர்பித்தனர். இந்நிலையில் கடந்த நிதியாண்டிற்கான தங்களின் அசையும் அசையா சொத்து கணக்கை அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் அரசு இணையதளத்தில் சமர்பிக்கவில்லை என கூறப்படுகிறது.இதையடுத்து பல முறை அவகாசம் தரப்பட்டு, 2023 டிச. 31 வரை கெடு விதிக்கப்பட்டது. இதில் 26 சதவீதத்தினர் மட்டுமே சொத்து விவரங்களை சமர்பித்தனர். இந்தநிலையில் அரசு அதிகாரிகள் வரும் 31-ம் தேதிக்குள் தங்களின் அசையும், அசையா சொத்து விவரங்களை சமர்பிக்காவிட்டால் இம்மாத சம்பளம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் 13 லட்சம் அரசு ஊழியர்கள் பீதியில் உள்ளனர்.