மத்திய மாநில அரசுகளிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைப்புசாரா தொழிலாளர்கள், நலவாரியங்கள், தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை முன்வைத்து மத்திய மாநில அரசுகளிடம் அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
குறிப்பாக, அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் ESI மருத்துவ வசதி, ரூபாய் 5000 மேல் ஓய்வூதியம், வீட்டு வசதி உள்ளிட்டவற்றை அமல்படுத்துதல், இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு கட்டாயப்பதிவு, அடிப்படைத் தேவைகள், தபால் வாக்குமுறை உள்ளிட்டவற்றை அமல்படுத்துதல், ரயில்வே மற்றும் பிற பொதுத் துறைகளை தனியார் மயத்திலிருந்து காத்து முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகைகள் உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன் வைத்துள்ளனர்.
மேலும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நல வாரியங்களை பாதுகாத்தல், கை பூ வேலை (Hand Embroidery) தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைத்தல், நலவாரிய அட்டை உள்ள அனைவருக்கும் முதல்வர் காப்பீடு திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாநில அரசிடம் முன் வைத்துள்ளனர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.