சென்னையில் உள்ள டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசைப் பல்கலைக்கழகத்தின் 2வது பட்டமளிப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடந்தது. விழாவில் தமிழக முதல்வரும், பல்கலைக்கழக வேந்தருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பழம்பெரும் பின்னணி பாடகி பி. சுசீலா, பாடகர் டி.எம். சுந்தரம் ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கியும், மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கியும் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
என்னுடைய தாத்தா முத்துவேலர் பாடுவார், பாடல்களும் எழுதுவார், என்னுடைய தந்தை, கலைஞர் அவர்கள் சினிமாவில் பாடல்கள் எழுதி உள்ளார். அவருக்கு இசை நுணுக்கள் தெரியும், என்னுடைய மாமா சிதம்பரம் ஜெயராமன், விண்யோடும், முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே என்ற பாடல் உள்பட பல பாடல்களை பாடியுள்ளார். எனவே இசையுடன் எங்கள் குடும்பத்துக்கு நெருங்கிய உறவு உள்ளது.
இசைக்காகவே உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் இது ஒன்றுதான். இது மாநில அரசின் நிதிஉதவியுடன் செயல்படுகிறது. முதல் அமைச்சரே இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருக்கிறார். நான் அரசியல் பேசவில்லை. யதார்த்தத்தை பேசுகிறேன். முதல்வர் தான் இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருக்கிறார்.
மற்றவர்கள் வேந்தராக இருந்தால் இதன் நோக்கம் சிதைந்து விடும். முதல்வர் தான் வேந்தராக இருக்க வேண்டும் . அது தான் நன்றாக இருக்கும் என அறிந்த அம்மையார் ஜெயலலிதா, 2013ல் மாநில முதல்வர்கள் தான் பல்கலைக்கழக வேந்தர்களாக இருக்க
வேண்டும் என சட்டம் கொண்டு வந்தார். அவரை பாராட்ட வேண்டும். நானும் பாராட்டுகிறேன்.
அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் முதல்வர் தான் வேந்தர்களாக இருக்க வேண்டும் என நாம் சொல்கிறோம். இதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். நல்ல தீர்ப்பு வரும். வரவேண்டும் என எதிர்பார்க்கிறோம். மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நீதிபதிகள் கருத்து சொல்லி உள்ளனர்.
தமிழ்நாட்டுக்காக மட்டுமல்ல, எல்லா மாநிலத்துக்காகவும் சேர்த்து தான் நாம் பேசுகிறோம். கல்வி தான் நமக்கு சொத்து. அது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். எனவே தான் கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்கிறோம்.
பி.சுசீலா, சுந்தரம் ஆகியோருக்கு டாக்டர் பட்டங்கள் வழங்கியதன் மூலம், அந்த பட்டங்கள் பெருமை அடைகிறது. இந்த பல்கலைக்கழகத்துக்கு ஆண்டு மானியம், அடுத்த நிதி ஆண்டு முதல் ரூ.3 கோடியாக உயர்த்தப்படும். பல்கலைக்கழகத்தில் நூலகம் அமைக்க ரூ.1 கோடி வழங்கப்படும்.
பட்டங்கள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள், தமிழ் உங்கள் முரசாகட்டும், அறிவு உங்கள் படைக்கலன் ஆகட்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார். விழாவில் அமைச்சர் சாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.