கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர் நடிகர் சுரேஷ் கோபி. கேரளாவில் வெற்றிபெற்ற ஒரே ஒரு பாஜக எம்.பி. இவர் தான். எனவே இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் இவர் அமைச்சர் பதவியை விரும்பவில்லை என்றே கூறப்பட்டது. பின்னர் பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்தநிலையில், கொச்சியில் நேற்று நடந்த ஒரு விழாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி கூறியதாவது:
மீண்டும் சினிமாவில் நடிக்க உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அனுமதி கேட்டேன்.
அதற்கு அவர், ‘எத்தனை படங்களில் நடிக்க உள்ளீர்கள்’ என, கேட்டார். ’22 படங்கள்’ என, பதிலளித்தேன். சற்று யோசித்த அமித்ஷா , அனுமதி வழங்கப்படும் என்றார்.
ஒட்டக்கொம்பன் படத்தில் நடிப்பதற்கு அனுமதி கேட்டுள்ளேன். இதுவரை அனுமதி வழங்கவில்லை.
அனுமதி வரவில்லை என்றாலும், செப்டம்பர் 6ல் படப்பிடிப்பில் பங்கேற்பேன். படங்களில் நடிப்பதற்காக, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினால், காப்பாற்றப்பட்டதாகவே நான் உணர்வேன். அமைச்சராக வேண்டும் என, நான் ஒருபோதும் ஆசைப்பட்டதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.அவரது இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.