Skip to content
Home » 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கியே தீருவோம்…. திருச்சியில் மத்திய அமைச்சர் முருகன் பேட்டி

10 லட்சம் பேருக்கு வேலை வழங்கியே தீருவோம்…. திருச்சியில் மத்திய அமைச்சர் முருகன் பேட்டி

  • by Authour

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள், தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில், அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணிநியமனம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது. மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி), ரெயில்வே தோ்வு வாரியம், அரசு பணியாளா் தோ்வாணையம் (எஸ்எஸ்சி) உள்ளிட்டவற்றின் வாயிலாக இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை இரண்டு கட்டங்களாக சுமாா் 1.47 லட்சம் பேருக்கு பணிநியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மூன்றாவது கட்டமாக நாடு முழுவதும் சுமாா் 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் இன்று வழங்கப்பட்டது. பிரதமா் நரேந்திர மோடி, காணொலி காட்சி மூலம்  பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மாநிலங்களில் மத்திய மந்திரிகள் கலந்து கொண்டு  பணி நியமன ஆணைகள் வழங்கினர். சென்னை ஆவடி சி.ஆர்.பி.எப். மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மத்திய மந்திரி எல்.முருகன் தலைமை தாங்கி பணி நியமன ஆணை வழங்கினார். இந்த விழாவில் தபால்துறை, மருத்துவ துறை, வங்கி பி.எஸ்.எப். உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 208 பேருக்கு பணி நியமன ஆணைகளை அவர் வழங்கி பேசினார். அதைத்தொடர்ந்து திருச்சி வந்தார்.

திருச்சியில் தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பணி ஆணை வழங்கும் விழாவில் பல்வேறு துறைகளில் தேர்வாகியுள்ள 75 நபர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.   அதில் 25 நபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக பணியாணை வழங்கினார். மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 25 நபர்களுக்கு பணி ஆணை வழங்கினார்.மீதமுள்ள 50 நபர்களுக்கு அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் பணி ஆணைகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் சுங்க வரி துறையின் திருச்சி மண்டல ஆணையர் அணில் வரவேற்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மூத்த சுங்கவரித்துறை அதிகாரிகள் மற்றும் வணிகவரி துறையை சேர்ந்த அதிகாரிகள் உ ள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.  இறுதியாக சுங்கவரி துறை இணை ஆணையர் பிரதீப் நன்றி கூறினார்.

 

அப்போது மத்திய அமைச்சர் முருகன் கூறியதாவது: மத்திய அரசாங்க பணிகளில் 10 லட்சம் பேருக்கு நிச்சயம் வேலைவாய்ப்புகளை வழங்குவோம்.

ரோஜ்கர் மேளா’ என்கின்ற மத்திய அரசின் மெகா வேலைவாய்ப்பு முகாம் மூலம், 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை, 71,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த வேலை வாய்ப்பு என்பது மத்திய அரசு மட்டுமல்லாது, இந்தியாவில் முழுவதும் ஆட்சி புரியும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளுகின்ற மாநிலங்களிலும், மாநில அளவிலான வேலைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

நாங்கள் போகும் போக்கில்  வாக்குறுதிகளை  சொல்லிவிட்டு, பின்னர் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பின்வாங்குபவர்கள் இல்லை. நாங்கள் சொல்லியது சொல்லியபடி, குறிப்பிட்ட நாட்களுக்குள், 10 லட்சம் பேருக்கு நிச்சயம் வேலை வாய்ப்புகளை வழங்குவோம்

சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகள் முடிந்த  இவ்வேளையில், தற்போது பணியில் சேர்பவர்கள் இன்னும், 25 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். வருங்கால இந்தியாவை வலிமையாக வழி நடத்துபவர்களாக இருப்பார்கள்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இந்தியா முழுவதும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதில் கடந்த ஆண்டு தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற்று அதன் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு இன்று பணி ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. தமிழர்களும் ஒன்றிய அரசின் பணியில்  அதிக அளவு சேர வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *