தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வுக்காக நேற்று நெல்லை வந்தார். இன்று பாளையங்கோட்டையில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் பங்கேற்றார். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். ஏராளமான மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் முதல்வர் பேசியதாவது: 2023 ம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தால் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் எப்படி பாதிக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியும். இதற்காக 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட்டோம். ஆனால் அவர்கள் கொடுத்தது. மிகவும் குறைவு.
இங்குள்ள பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கோபித்துக்கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டுக்கு நிதியும், கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய அரசு வஞ்சிக்கிறது. தேர்தல் வரும் மாநிலங்களுக்கு மட்டும் தான் நிதி கொடுக்கிறார்கள். அல்லது பாஜகவினர் ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் தான் நிதி கொடுக்கிறார்கள்.
இந்தியாவின் வரைபடத்தில் மட்டும் தமிழ்நாடு இருந்தால் போதுமா, பட்ஜெட்டில் தமிழ் நாடு இடம்பெற வேண்டாமா, தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்கள் வேண்டாமா, திருநெல்வேலி அல்வா உலக பேமஸ், ஆனால் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு கொடுத்த அல்லவா அதை விட பேமஸ்.
ஆனாலும் எங்களைப்பொறுத்தவரையில் மத்திய அரசு நிதி தரவில்லை என்று மத்திய அரசை குறை கூறிக்கொண்டு இருக்கவில்லை. வாக்களித்த மக்களுக்கு உண்மையாக இருக்கிறோம். நேற்று கூட கங்கைகொண்டானில் 2 ஆண்டுகளில் டாடா சோலார் பவர் ஆலையை தொடங்கி வைத்தோம்.
அதில் 80% பேர் பெண்கள் வேலை பெற்று உள்ளனர். அதில் ஒரு பெண், அப்பா எங்க ஊர்ல, இவ்வளவு பெரிய தொழிற்சாலை ஏற்படுத்தி, அதில் எனக்கும் வேலை கொடுத்ததற்கு நன்றி என்றார்.
அதிமுக ஆட்சியில் புரிந்துணர்வு போட்டதுடன் அப்படியே கிடப்பில் போட்ட ஆலை திட்டத்தையும் நாங்கள் வந்து செயல்படுத்தி வருகிறோம். அங்கும் வேலை வாய்ப்பில் பெண்களுக்கு முக்கியத்தும் தரப்படும்.
தமிழ்நாட்டில் குறிப்பாக தென் மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படும். தென் பாண்டி சீமை வளர்ச்சி அடுத்த 5 வருடங்களில் புலி பாய்ச்சலாக இருக்கும். அதன் மூலம், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்கள் வளரும்.
தமிழ்நாட்டில் வளர்ச்சியை பொறுக்காமல் சிலர் அவதூறுகளை அள்ளிவீசுவதை காணலாம். எதிர்க்கட்சிகள் எங்களை விமர்சிக்க கூடாது என்று சொல்ல வில்லை. ஆக்கபூர்வமாக செயல்படுங்கள். கடந்த அரை நூ ற்றாண்டில் பார்த்து விட்டேன். அவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று இறுமாப்போடு நான் பேசவில்லை. நியாயம் இருந்தால் சரி, எனக்கு எதிராக பேசிவிட்டார்கள் என்ற கோபம் எனக்கு கிடையாது.
தமிழ்நாடு வளர்ந்தால் சரி, திமுகவை எப்படி அழிக்கலாம், தமிழ்நாட்டின் வளர்ச்சியை எப்படி தடுக்கலாம் என பார்க்கிறார்கள். ஆட்சி இருப்பதால் தானே இப்படி வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருகிறார்கள் என எண்ணுகிறார்கள். நான் உரிமையோடு சொல்கிறேன். திமுக எப்போதும் தமிழ்நாட்டுக்கு பக்கபலமாக இருக்கும். நீங்களும் எப்போதும் திமுக பக்கம் இருப்பீர்கள் . திமுக தான் எப்போதும் தமிழ்நாட்டை ஆளும். அதற்கு தொடர்ந்து நீங்கள் ஆதரவு தரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். விழாவில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், கே. என். நேரு, மற்றும் எம்.பி, எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.