அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருமாவளவன் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறியதாவது: தமிழ்நாட்டில் உயர்த்தபட்ட மின் கட்டணம் பொதுமக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை முதலமைச்சர் பரிசீலனை செய்ய வேண்டும்.
நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை, மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும். குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும். அரியலூர் மாவட்ட பொதுமக்களின் கோரிக்கையின் படி அரியலூர் வழியாக செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் அரியலூரில் நின்று செல்ல வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் அனைத்து கட்சிகளும் விடுத்த கோரிக்கையையடுத்து, மயிலாடுதுறை வரையில் வந்துள்ள மைசூர் எக்ஸ்பிரஸ் தற்போது கடலூர் வரை நீட்டித்துள்ள தென்னக ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன்
.
மேலும் கடந்த 10 ஆண்டுகளில் கார்ப்பரேட் கம்பெனிகள் நலனை கருத்தில் கொண்டுதான் பட்ஜெட் தயாரித்து உள்ளார்கள். மக்கள் நலனை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிப்பதில்லை. இப்போதும் வரக்கூடிய பட்ஜெட் மக்கள் நலன் சார்ந்த பட்ஜெட்டாக இருக்கும் என எதிர்பார்க்க இயலாது என கூறினார்.