தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் 5 இடங்களில் அருங்காட்சியகம் அமைக்க மொத்தமாக ரூ.2500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக ஆதிச்சநல்லூருக்கும் செலவிடப்படுகிறது. 1200 ஆண்டுகளுக்கும் பழமையானது இந்த ஆதிச்சநல்லூர். எனவே விரைவில் இதற்கான பணிகளை முடிப்போம். தமிழக அரசு கீழடியில் மிகச் சிறப்பான பணிகளை முன்னெடுத்து மேற்கொண்டு வருகிறது.
மணிப்பூரில் நடக்கும் கலவரம் இப்போது முதலாவதாக நடப்பது அல்ல. அரசியல் பேசுவதாக நினைக்க வேண்டாம். கடந்த 2013-ம் ஆண்டு மருந்துகள் உட்பட எந்த ஒரு பொருட்களும் மணிப்பூரில் கிராமங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது மத்திய உள்துறை மந்திரி கூட அங்கு செல்லவில்லை. ஆனால் இப்போது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாட்கள் அங்கு தங்கியிருந்து அங்குள்ள நிலைமைகளை ஆய்வு செய்து திரும்பி இருக்கிறார். எதிர்க்கட்சிகள் மணிப்பூர் சென்று நேரில் பார்த்துக்கொண்டு வந்த பிறகும் கூட அவர்களது கருத்துக்களை தெரிவிக்கவில்லை.
சம்பந்தப்பட்ட உள்துறை மந்திரியிடம் தெரிவித்தால் அதற்கான விடை கிடைக்கும். ஆனால் அவர்கள் அங்கு என்ன நடந்தது என்று குறித்து பேசவில்லை. உள்துறை மந்திரி பாராளுமன்றத்தில் மணிப்பூர் கலவரம் குறித்து பதில் சொல்ல தயாராக இருந்தும், எதிர்க்கட்சிகள் அதுதொடர்பாக விவாதிக்க தயாராக இல்லை. எதிர்க்கட்சிகள் சர்ச்சை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயல்படுகிறார்கள். பாராளுமன்றத்துக்கு பிரதமர் நேரில் வந்து தான் ஒரு விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ராகுல்காந்தி பாராளுமன்றத்துக்கு வரட்டும். பார்த்துக் கொள்ளலாம். எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.