மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:
கடினமான காலங்களில் சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ.100 கோடி ஒதுக்கப்படுகிறது. ஊரக வளர்ச்சிக்கு 2.66 லட்சம் கோடி ஒதுக்கீடு. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு. முத்ரா கடன் உச்சவரம்பு இதுவரை 10 லட்சமாக இருந்ததை, இனி ரூ.20 லட்சமாக அதி்கரிக்கப்படும். 12 தொழில் பூங்காக்களுக்கு விரைவில் தொடங்கப்படும். நகரங்கள், மற்றும் கிராமங்களில் மேலும் 3லட்சம் வீடுகள் கட்டப்படும்.
நாடு முழுவதும் 20 தொழில் பேட்டைகள் அமைக்கப்படும். பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்திற்கு ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்படும். ஆந்திராவில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். பீகாரில் வெள்ள பாதிப்பை தடுக்க சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்த சிறு அணுமின்நிலையங்கள் ஏற்படுத்தப்படும். பத்திரப்பதிவு கட்டணங்களை மாநில அரசுகள் குறைக்க வேண்டும். பீகார் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறது. எனவே அந்த மாநிலத்திற்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.11,500 கோடி வழங்கப்படும். இமாச்சலில் வெள்ள பாதிப்பை தடுக்க திட்டம் செயல்படுத்தப்படும். பீகாரில் புதிய சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்படும். வெள்ள மேலாண்மைக்கு அசாம் மாநிலத்திற்கு நிதி
காசி விஸ்வநாதர் கோயில், கயா மற்றும் புத்தகயா கோயில்கள் மேம்படுத்தப்படும். பீகாரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகம் மற்றும் சுற்றுலா துறைக்கும் நிதி ஒதுக்கப்படும். காசிவிஸ்வநாதர் கோயில் உலகதரத்திற்கு மேம்படுத்தப்படும். பீகாரில் மின் உற்பத்தி ஆலைகள் அமைக்க ரூ.2400 கோடி. விண்வெளி சார்ந்த திட்டங்களுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்படுகிறது.
நடப்பு ஆண்டில் மொத்த வருவாய் 32.07லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி பற்றாக்குறை மொத்த ஜடிபியில் 4.09% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொபைல் போன், மொபைல் சார்ஜர் போன்றவற்றுக்கான சுங்க வரி 15% ஆக குறைக்கப்படகிறது.
நடப்பு நிதியாண்டில் மொத்த செலவினம் 48.21 லட்சம் கோடியாக இருக்கும்.
மத்திய அரசின் கடன் குறைந்து வருகிறது. ஜிஎஸ்டி வரி முறை மேலும் எளிதாக்கப்படும். தங்கம்,வெள்ளி, ஆகியவற்றின் சுங்கவரி 15% ல் இருந்து 6% ஆக குறைக்கப்படும். புற்றுநோய்க்கான 3 மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. பிளாட்டினத்திற்கு 12 %ல் இருந்து 6.4% ஆக வரி குறைக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு இறக்குமதி வரி உயர்வு.
நேரடி வரி விதிப்பை எளிமைப்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இணைய வர்த்தகத்திற்கான டிடிஎஸ் குறைப்பு. டிடிஎஸ் தாக்கல் தாமதம் இனி கிரிமினல் குற்றமல்ல. அறக்கட்டளைகளுக்கு ஒரே மாதிரியான வரி விதிக்கப்படும்.
அனைத்து வகை முதலீட்டாளர்களுக்கான ஏஞ்சல் வரி ரத்து செய்யப்படுகிறது. வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரி 40 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக குறைக்கப்படுகி்றது. முதலீடுகளை ஈர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனி நபருக்கான வருமான வரிக்கான நிலையான கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக அதிகரிப்பு .தனி நபர் வருமான வரியில் மாற்றம் இல்லை.
புதிய வருமான வரி திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வருமானம் இருந்தால் வருமான வரி இல்லை.
3 லட்சத்து 1 ரூபாயில் இருந்து 7 லட்சம் வரை வருமானம் இருந்தால் 5 % வருமான வரி செலுத்த வேண்டும்.
7லட்சத்து 1 ரூபாயில் இருந்து 10 லட்சம் வரை வருமானம் இருந்தால் 10 % வரி செலுத்த வேண்டும்.
10 லட்சத்து 1 ரூபாயில் இருந்து 12 லட்சம் வரை வருமானம் இருந்தால் 15 % வரி செலுத்த வேண்டும்.
12 லட்சத்து 1 ரூபாயில் இருந்து 15 லட்சம் வரை வருமானம் இருந்தால் 20 % வரி செலுத்த வேண்டும்.
15 லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தால் 30% வருமான வரி செலுத்த வேண்டும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டு இருந்தது.
தற்போது ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வரை தனி நபர் வருமானவரி கிடையாது என ஒரு திட்டமும், ரூ.3 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கும் ஒரு திட்டமும் நடைமுறையில் உள்ளது. ஆனால் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது என அறிவித்து உள்ளனர்.
பொதுவாக அரசு ஊழியர்கள், சிறு தொழில் செய்பவர்கள் வருமான வரி உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தவேண்டும் என எதிர்பார்த்தார்கள். ஆனால் அது அறிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில் தனி நபருக்கான வருமான வரிக்கான நிலையான கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே வருமான வரி செலுத்துவோருக்கு இந்த பட்ஜெட் ஏமாற்றத்தை தந்துள்ளது. அதுபோல தமிழ்நாட்டுக்கு பெரிதாக எந்த திட்டங்களும் தரப்படவில்லை. இதனால் தமிழ் நாட்டு மக்களுக்கும் ஏமாற்றத்தையே தந்துள்ளது.
அதே நேரத்தில் பாஜகவின் கூட்டணி கட்சிகளான நிதிஷ்குமாரின் கட்சி ஆளும் பீகார் மாநிலத்துக்கும், சந்திரபாபு நாயுடு ஆளும் ஆந்திர மாநிலத்துக்கும் நிதி தாராளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கூட்டணி அரசில் இந்த கட்சிகள் இடம் பெற்று இருப்பதால் அந்த மாநிலங்களுக்கு தாராளமாக நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.