Skip to content
Home » மதுரை, திருவாரூர் தேரோடும் வீதிகளில் பாதாள வழி மின்விநியோகம்…. பணி தொடக்கம்

மதுரை, திருவாரூர் தேரோடும் வீதிகளில் பாதாள வழி மின்விநியோகம்…. பணி தொடக்கம்

கடந்த ஆண்டு தஞ்சையில்  தேரோட்டம் நடந்தபோது தேர் மின்கம்பத்தில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து 11 பக்தர்கள் பலியானார்கள். இதனால் தமிழ்நாட்டில் தேரோடும் ரத வீதிகளில், பாதாள வழி மின்சாரம் வினியோகிக்கப்படும் என  மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி  சட்டமன்றத்தில் அறிவித்தார்.

அதன்படி திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோவில், ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாதர் திருக்கோவில், கோயம்புத்தூர் அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில், அவிநாசி அருள்மிகு அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோவில், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில், திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், கரூர் தான்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவில் மற்றும் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரீஸ்வரர் திருக்கோவில், அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில், அருள்மிகு காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோவில் ஆகிய திருத்தலங்களிலுள்ள தேரோடும் பாதைகளில் மேலே செல்லும் மின்கம்பிகள் அனைத்தும் புதைவடங்களாக மாற்றியமைக்கப்படும்.

இத்திருத்தலங்களில் நடைபெறும் தேரோட்டத்தின் போது பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவதால், இவ்வாறு, மேல்நிலை மின் கம்பிகளை புதைவடங்களாக மாற்றி அமைப்பதன் மூலம் பொது மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதுடன், மின் விபத்துக்களும் முற்றிலும் தடுக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.

அதன் அடிப்படையில் இந்த பணிகளை உடனடியாக தொடங்க அமைச்சர்,  பொறியாளர்களுக்கு  உத்தரவிட்டார். முதல் கட்டமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்செந்துார் முருகன் கோயில், திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் தெரு வீதிகளில், கேபிள் முலம் மின் வினியோகம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் இந்த பணிகள் முடிந்ததும் படிப்படியாக மற்ற கோயில் உள்ள வீதிகளிலும் புதை வட மின்பாதை அமைக்கும் பணி தொடங்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!