உழவர் விருதுகள் 2023 ல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உழவர்களுக்காக தமிழக அரசுக்கு நடிகர் கார்த்தி கோரிக்கை வைத்துள்ளார்.
அதன் விபரம் பின்வருமாறு….
#உழவர் சந்தையிலோ, அங்காடிகளிலோ பொருட்களைக் கொண்டு சேர்க்க போக்குவரத்து தேவைப்படுகிறது. அதை அரசாங்கங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதை மாபெரும் கோரிக்கையாக வைக்கிறேன்.
#500 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் அனைவரும் சேர்ந்து விவசாயக் கூட்டமைப்பிடம் எங்களுக்குத் தேவையான காய்கறிகளை கேட்டால், அவர்கள் செய்துக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.
#ஒரு மொழியை இழந்தால், அந்த கலாச்சாரமே போய்விடும்..
#எனக்கு எப்படி இவர்களைத் தெரியாமல் இருந்தது? என்று கூச்சமாகவே இருந்தது..
சிறு குறு விவசாயிகள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் வகையில் விவசாய கருவிகளை உருவாக்கும் போட்டி இந்த ஆண்டு நடைபெறும்.
சிவராமன் சார், அனந்த் சார் மற்றும் இஸ்மாயில் சார் இவர்கள் தான் இந்த என்.ஜி.ஓ-க்கு முதலீடு என்று கூறுவேன். சமூகத்தின் மீது இவர்களுக்கு இருக்கும் அக்கறை, அனுபவம் எல்லாம் சேர்ந்து தான் இதை வழிநடத்தி
செல்கிறார்கள். ராஜ்கிரன் ஐயா, பொன்வண்ணன் சார் மற்றும் பாண்டிராஜ் சாருக்கு நான் நன்றி தெரிவிக்க போவதில்லை. ஏனென்றால், என்னுடைய சிந்தனையில் பாதியைக் கொண்டவர்கள். மேலும், எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்து பரிசு பெற்று எங்களைச் சிறப்பித்த விவசாய பெருமக்களுக்கு நன்றி.
இது மாதிரி நிகழ்ச்சிகள் அடிக்கடி நிகழ்வதில்லை. எந்த விஷயங்களையும் நாம் தேடி தெரிந்து கொள்வதும் இல்லை. தினேஷ்-ன் நவீன உழவனை பின்பற்றுபவர்களுக்கு நிறைய விஷயங்களைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கலாம். உழவன் அறக்கட்டளை தொடங்கிய புதிதில் விவசாயத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நாமும் செய்யலாம் என்று நினைத்தேன். அச்சமயத்தில் என்னை நிறைய விழாக்களுக்கு அழைத்திருந்தார்கள். குறிப்பிட்ட விழா ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்த போது, விவசாயம் சார்ந்த பெர்னான்ட்ஷா மற்றும் ஆண்டனி தாஸ் இவர்கள் 30, 40 வருடங்களாக விவசாயம் செய்கின்றவர்களை அழைத்திருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவராக வரும்போது எனக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. இவர்கள் தானே நம்முடைய நாயகர்கள்? இவர்களை ஏன் நாம் அடையாளப்படுத்தவில்லை? இவர்கள் ஏன் சமூகத்திற்கு தெரியவில்லை? எனக்கு எப்படி இவர்களைத் தெரியாமல் இருந்தது? என்று கூச்சமாகவே இருந்தது. வறண்ட ஒரு பூமியை கடன் வாங்கி குத்தகைக்கு எடுத்து, கிணறு வெட்டி, விவசாயம் செய்து சாதித்த பின், அந்த ஊரே அவர்களை அண்ணார்ந்து பார்க்கிறது என்றால் அது சாதாரண விஷயமில்லை. மிகப் பெரிய சாதனை.
எங்களை எப்படி தேடிப் பிடித்தார்கள் என்று தெரியவில்லை. இன்று லண்டன் மற்றும் துபாயில் கடை போட்டிருக்கிறேன் என்று கோத்தகிரியில் இருந்து வந்தவர் கூறினார். விவசாயம் செய்ததால் ஊரில் எனக்கு மரியாதை இருக்காது. ஆனால், இன்று என்னிடம் ஆட்டோகிராப் வாங்கும் அளவிற்கு நட்சத்திரமாகி இருக்கிறேன். எங்கு சென்றாலும் கைத்தட்டல்கள் கிடைக்கிறது என்று கூறுகிறார்கள். ஆகையால், ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்த வேண்டிய விழா என்பது புரிகிறது.
அதேசமயம், அந்து சார் கூறியது போல சிறு குறு விவசாயிகள் மற்றும் பெண்கள் பயன்படுத்துவதற்கேற்ப கருவிகளை வடிவமைக்கும் போட்டியும் ஏற்பாடு செய்திருக்கிறோம். சென்ற வருடமே முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், தாமதமாகி விட்டது. இந்த வருடம் நிச்சயம் நடத்துவோம். இதற்கு அண்ணா பல்கலைக் கழகமும் உடன் இருக்கிறார்கள் என்பதில் மிகப் பெரிய சந்தோஷம். ஏனென்றால், பொறியியலாளர்களால் தான் சுலபமாகவும், எளிமையாக உருவாக்க முடியும். இங்கு வந்த அனைவருக்கும் நன்றி என்றார்.