பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியாவிற்கு வருவதில் மகிழ்ச்சியாக உள்ளது. அதேநேரத்தில் உக்ரைனின் சூழ்நிலை பொறுத்தே பயணம் அமையும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். அப்போது அவரை இந்தியா வரும்படி மோடி அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக ஜெலன்ஸ்கி கூறியதாவது: மீண்டும் நாங்கள் இருவரும் ஒன்றாக சந்திப்பது நல்லது என நினைக்கிறேன். அதுவும் இந்தியாவில் நடந்தால் சிறந்தது. இந்தியா பெரிய, சிறந்த நாடு. போர் காரணமாக, அங்கு செல்வதற்கு நேரம் கிடைக்காதது பரிதாபம். இந்தியா எங்கள் பக்கம் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இந்திய அரசும், பிரதமரும் என்னை பார்க்க தயாராக இருக்கும் பட்சத்தில் நான் இந்தியா வருவதில் மகிழ்ச்சி அடைவேன். எனது இந்திய பயணம் உக்ரைனில் உள்ள சூழ்நிலையை பொறுத்து அமையும். இவ்வாறு அவர் கூறினார்.