Skip to content
Home » கல்வியில் பின்தங்கிய மாநிலங்கள் பட்டியலில் உ.பி முதலிடம் .. தமிழ்நாடு…?

கல்வியில் பின்தங்கிய மாநிலங்கள் பட்டியலில் உ.பி முதலிடம் .. தமிழ்நாடு…?

தேசிய அளவில் கல்வியில் பின் தங்கியுள்ள மாவட்டங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அடையாளம் கண்டுள்ளது. இந்த பட்டியலை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்டிருந்த நிலையில், இதில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. அதாவது, இந்த மாநிலம்தான் அதிக அளவில் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களை கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்தில் ராம்பூர், சீதாபூர், சுல்தான்பூர், முசாபர் நகர், உனாவ் என மொத்தம் 41 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பதாக பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) அடையாளம் கண்டுள்ளது. இம்மாநிலத்தில் மொத்தம் 75 மாவட்டங்கள் இருக்கிறது. அப்படியெனில் சரிபாதிக்கும் அதிகமான மாவட்டங்கள் கல்வி அறிவு பெறுவதில் பின்தங்கி இருக்கின்றன. உத்தரப் பிரதேசத்தை தொடர்ந்து மத்திய பிரதேசம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தற்போது இந்த இரண்டு மாநிலங்களிலும் பாஜகதான் ஆட்சி செய்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 52 மாவட்டங்கள் இருக்கின்றன. இதில் 39 மாவட்டங்கள் கல்வியில் பின் தங்கி இருப்பதாக யுஜிசி அடையாளம் கண்டிருக்கிறது. இதுவும் சரிபாதி எண்ணிக்கைக்கு மேலானதாகும். மத்தியப் பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தான் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்த மாநிலத்தில் 30 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி இருக்கின்றன. அதேபோல நான்காவது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டில் 27 மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி இருக்கின்றன. அதாவது, அரியலூர், கோவை, கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், மதுரை, விருதுநகர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சை, நீலகிரி, தேனி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களாக யுஜிசி அடையாளம் கண்டுள்ளது. அதேபோல இந்த பட்டியலில் கேரளா, இமாச்சல பிரதேசம் மாநிலங்கள் கடைசி இடங்களை பிடித்திருக்கின்றன. கேரளாவில் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் வெறும் 4 மாவட்டங்கள்தான் கல்வியில் பின்தங்கியுள்ளன. இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 12 மாநிலங்களில் 5 மாநிலங்கள்தான் கல்வியில் பின் தங்கியுள்ளன. இதற்கெல்லாம் ஹைலைட்டாக நாகலாந்து மாநிலம் இருக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தம் 16 மாவட்டங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரேயொரு மாவட்டம் மட்டுமே கல்வியில் பின்தங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *