தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தற்போது திமுகவில் இளைஞரணி செயலாளராகவும், தமிழ்நாடு அரசாங்கத்தில் மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார். கட்சி ரீதியாக அவரை முன்னணி நிலைக்கு கொண்டு வந்த திமுக தலைமை, தற்போது அரசு ரீதியாகவும் முன்னணி பொறுப்புக்குக் கொண்டு வர முடிவெடுத்துள்ளது.
அண்மைக்காலமாகவே அரசு நிகழ்ச்சிகள் பெரும்பாலானவற்றில் முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் உதயநிதி ஸ்டாலின் தான் கலந்து கொள்கிறார். பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஆய்வு கூட்டங்களிலும் அவரே கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். இந்த நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற அயலக தமிழர் தின விழாவிலும் அவரே தலைமையேற்று விழாவை தொடங்கி வைத்து பேசினார்.
இது போன்ற பல முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் உதயநிதி ஸ்டாலின் அதிகாரப்பூர்வமற்ற நிலையில் துணை முதல்வர் போல பங்கேற்கும் நிலையில் அவரை அதிகாரப்பூர்வமாகவே துணை முதல்வராக நியமிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜனவரி 21-ம் தேதி சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாடு முடிவடைந்த உடன் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருக்கிறார். அப்போது தமிழ்நாடு அரசை நிர்வாகம் செய்ய தனது மகன் அமைச்சர் உதயநிதியை துணை முதல்வராக நியமித்து அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டுச்செல்ல அவர் திட்டமிட்டு இருக்கிறார்.
எனவே ஜனவரி 21 மாநாடு முடிந்ததும் அன்றைய தினமே அல்லது அடுத்த ஒரு சில தினங்களுக்குள் துணை முதல்வர் பொறுப்பை உதயநிதி ஸ்டாலின் ஏற்பார் என செய்திகள் வெளியாகி உள்ளன.