இளைஞர் நலன் மன்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று இரவு விமானம் மூலம் கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு, மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயல்வீரர்கள், அனைத்து அணி நிர்வாகிகள் கோவை வந்து உள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதன் முதலாக இன்று கோவை வருவதால், கோவை இதுவரை கண்டிராத அளவுக்கு வரவேற்பை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் கோவை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
வரவேற்பு முடிந்ததும் கோவையில் இன்று இரவு தங்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாளை காலை 10 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆய்வு மேற்கொள்கிறார். அதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்துகிறார். அதைத்தொடர்ந்து கொடிசியா மைதானத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
மேற்கண்ட விழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கண்ட இடங்களில் மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது: பதவியேற்ற பிறகு முதன் முறையாக அமைச்சர் உதயநிதி இன்று கோவை வருகிறார். அத்துடன் அவர் கோவை மக்களுக்கு முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பல்லாயிரகணக்கான மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். குறிப்பாக இளைஞர் நலன் சார்ந்த நலத்திட்டங்கள் அதிக அளவில் வழங்க இருக்கிறார்.
எனவே அமைச்சரை வரவேற்க திமுகவினர் மட்டுமல்ல, கோவை மாவட்ட மக்கள், குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் ஆர்வமுடன் உள்ளனர். கோவை மாவட்டம் இதுவரை கண்டிராத அளவுக்கு விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.