கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் காலணியில் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு எல்.கே.ஜி, யூ.கே.ஜிக்கு மாணவர் சேர்க்கை நடத்தி வகுப்புகளை எடுத்து வந்தனர். இன்று இறுதி நாள் என்பதால் யூ.கே.ஜி படித்த 10 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மாணவ, மாணவிகளுக்கு அங்கி அணிவித்தும், தொப்பி அணிவித்தும் பட்டமளிக்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் பட்டமளிப்பு உடை அணிந்து மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், பாராட்டுச் சான்றிதழ், பதக்கம் அணிவித்து பாராட்டினார். இதனை
பள்ளியில் படிக்கும் மற்ற மாணவ, மாணவிகள் கைதட்டி பட்டம் பெற்றவர்களை உற்சாகப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் குழந்தைகளின் பெற்றோர், ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டு வாழ்த்தினர். அரசுப் பள்ளியில் கே.ஜி படிக்கும் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடத்தியது, அரசுப் பள்ளிகளிலும் தனியாருக்கு இணையாக அனைத்தும் இருப்பதை வெளிக்காட்டவே நடத்தியதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.