டூவீலர் திருட்டு…
திருச்சி ஆர்.சி.நகர் அஞ்சல்காரன் நகரை சேர்ந்தவர் காதர்ஷெரீப் (வயது 36). சம்பவத்தன்று இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை அவர் எழுந்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை, மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆட்டோ மோதி பெண் படுகாயம்
ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியை சேர்ந்தவர் கண்ணன் அவருடைய மனைவி சுபா (வயது 55). சம்பவத்தன்று மாலை சுபா தனது வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ அவர் மீது மோதியது. இதில் கீழே விழுந்த அவருக்கு தலை மற்றும் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
திருச்சி கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிந்தாமணி அண்ணாசிலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள டீக்கடை அருகில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை ஒருவர் விற்றுக்கொண்டு இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக திருவானைக்காவல் நடுகொண்டையம்பேட்டையை சேர்ந்த ராம்குமார்(வயது 35) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதிய ரசீதுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.