டாஸ்மாக் கடையின் பூட்டு உடைப்பு …
திருச்சி மாவட்டம் , முசிறி, எம்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (51). இவர் தென்னுார், குப்பன்குளம் டாஸ்மாக்கில் மேல்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று இவர் டாஸ்மாக்கை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை திரும்பி வந்து பார்த்தபோது டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது, உள்ளிருந்த பொருட்கள் ஏதும் திருட்டுபோகவில்லை. இது குறித்து கிருஷ்ணகுமார் அளித்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டாஸ்மாக் அருகே நிறுத்தி இருந்த டூவீலர் திருட்டு.
திருச்சி, குமரன் நகர், போலீஸ் காலனியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் ஆலோசியஸ் (51). இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தன் இருசக்கர வாகனத்தை உய்யக்கொண்டான் திருமலை டாஸ்மாக் அருகே நிறுத்திவிட்டு சென்றார், திரும்பி வந்து பார்த்தபோது நிறுத்திய இடத்தில் இருந்து வாகனம் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து ஜார்ஜ் ஆலோசியஸ் அளித்த புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி, அரியமங்கலம், உக்கடை, பூங்காயி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரவி (65). இவர் தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவரது மனைவி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ரவி தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அவரது மகன் ராஜசேகர் அளித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டு வேலை கிடைக்காததால் விரக்தி… வாலிபர் தற்கொலை
திருச்சி மாவட்டம் மணச்சநல்லுார், பூனாம்பாலையம், எருதுகாரபண்ணையைச் சேர்ந்தவர் வசந்த் (28). இவர் வெளிநாட்டு வேலைக்காக தன் உறவினர் 15 பேரிடம் ரூ.19 லட்சம் வரை கடன் வாங்கி அதை முத்துசெல்வம் என்பவரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி வேலைக்காக கொடுத்தார். இந்நிலையில் முத்து செல்வம் வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் திரும்ப தராமல் வசந்தை ஏமாற்றியுள்ளார். இதில் மனஉளைச்சலில் இருந்து வந்த வசந்த் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உடனடியாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கிருந்து மேற்சிகிச்சைக்காக அவர் ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அங்கு வசந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது உறவினர் அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி அரியமங்கலத்தில் போதை மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது.
திருச்சி, அரியமங்கலம், மலையப்பநகர் அருகே போதை பொருள் விற்பனை நடப்பதாக அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த 2 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவ்விருவரும் அரியமங்கலம், மலையப்ப நகர், அண்ணா தெருவைச் சேர்ந்த மதன் (40) மற்றும் குமார் (27) என்பதும், அவர்கள் போதை மாத்திரை விற்றதும் தெரியவந்தது. இந்த 2 பேரையும் அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 60 போதை மாத்திரை, 2 போதை ஊசி மற்றும் 2 தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.