அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப் இரண்டு ராஜா சோமசுந்தரம் ஆலோசனைக்கிணங்க ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் வழிப்பறி வழக்கில் குற்றவாளியை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை செய்ததில் அவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மேலமருதூர் கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவரது மகன் ராஜ்குமார்(43) என்பது தெரியவந்தது.
மேலும் போலீசார் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில் அவர் திருவண்ணாமலை ,விழுப்புரம்,
புதுக்கோட்டை நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதியிலும் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். இதனையடுத்து அவரிடமிருந்து ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான பல்வேறு விதமான 21 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ராஜ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ஒரே நபர் 21 இரண்டு சக்கர வாகனங்களை திருடிய சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.