கோவை அருகே உள்ள துடியலூர் பகுதியில் பூட்டிய வீட்டில் பேக்கரி மற்றும் ஸ்வீட் கடை உரிமையாளர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் மகேஷ் ஆகியோர் துடியலூர் பகுதியில் பேக்கரி மற்றும் இனிப்பக கடை நடத்தி வந்து உள்ளனர். இவர்கள் இருவரும் கடைக்கு வராததால் சந்தேகம் அடைந்த கடை ஊழியர்கள், விசுவநாதபுரம் பகுதியில் அவர்கள் வாடகைக்கு குடியிருந்த வீட்டிற்கு சென்று உள்ளனர்.
அங்கு வீடு பூட்டிய நிலையில் இருந்ததால் ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்து உள்ளனர். அப்போது, மகேஷ் என்பவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும், ஜெயராஜ் தூக்கிட்ட நிலையிலும் சடலமாக காணப்பட்டனர். அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இதுகுறித்து துடியலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துடியலூர் போலீசார், உடல்களை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து துணை ஆணையர் சிந்து தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்ட விசாரணையில், மகேஷை கொலை செய்து விட்டு ஜெயராஜ் தற்கொலை செய்து கொண்டாரா ? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
பூட்டிய வீட்டில் இருவர் சடலமாக மீட்கப்பட்ட இந்த சம்பவம் துடியலூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணைக்கு பின்னரே மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
