தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் உட்கோட்டம், கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்திற்குட்பட்ட பெரிய மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் கடந்த 13.11.2021-ம் தேதி அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் வந்து கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க செயினை பறித்து சென்றதாக கும்பகோணம் மஹாவீர் நகரைச் சேர்ந்த சரோஜா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேற்படி வழக்கினை புலன் விசாரணை செய்த காவல் ஆய்வாளர் அழகேசன் வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரியான கும்பகோணம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பாலாஜி (26) என்பவரை கடந்த 13.11.2021-ம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி, பின்னர் இவ்வழக்கில் புலன்விசாரணையை முடித்து எதிரியின் மீது 22.04.2022-ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.
இவருக்கு அம்மாப்பேட்டை மற்றும் கும்பகோணம் மேற்கு ஆகிய காவல் நிலையங்களில் முன் வழக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கின் சாட்சிகளை விசாரணை செய்த கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி 12.11.2024-ம் தேதி வழக்கின் குற்றவாளிக்கு 32 மாத சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராத தொகையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கில் திறம்பட பணிபுரிந்தமைக்காக துணைக்காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்றக் காவலர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினர்.