மயிலாடுதுறை வள்ளாலகரம் சேந்தங்குடி ஜோதி நகரை சேர்ந்தவர் மணிபாரதி. இவரது வீட்டில் கடந்த 20ம் தேதி இரவு லோ வோல்டேஜ் ஏற்பட்டு மின்விசிறி சரியாக சுற்றவில்லை. ஏசியை ஆன் செய்தால் அது தானாக ஆப் ஆகி உள்ளது.
இது குறித்து மணிபாரதி அன்று இரவு 10.34 மணிக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ட்வீட்டரில் தகவல் தெரிவித்தார். அதில் தயவு கூர்ந்து லோ வோல்டேஜ் பிரச்னையை சரி செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.
இதனை பார்த்த அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக மணிபாரதிக்கு ட்வீட்டரில் பதில் அளித்தார். அதில் அன்பு சகோதரரே உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருந்தார்.இது குறித்து அமைச்சர் சம்பந்தப்பட்ட மின்துறை அதிகாரிகளுக்கும் தெரிவித்தார்.
மறுநாள் காலையிலேயே மின் துறை அதிகாரிகள், ஊழியர்கள் மணிபாரதி வீட்டுக்கு வந்து அந்த பகுதி மின் இணைப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். லோ வோல்டேஜ் பிரச்னையை உடனடியாக தீர்த்து வைத்தனர்.
அத்துடன் அந்த பகுதியில் இதுபோன்ற பிரச்னை இனி ஏற்படாமல் இருக்க புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பது தான் வழி என்பதை அதிகாரிகள் மூலம் அறிந்த அமைச்சர், டிரான்ஸ்பார்மர் அமைக்கவும் உத்தரவிட்டார். இதற்கான பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வந்தது. இந்த பணிகள் முடிக்கப்பட்டு நேற்று இரவு டிரான்ஸ்பார்மர் செயல்பாட்டுக்கு வந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் தமிழக அரசுக்கும், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் பாராட்டு தெரிவித்தனர்.
இது குறித்து அமைச்சர் செந்தல் பாலாஜி தனது ட்வீட்டரில் கூறி இருப்பதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் நல்லாசியுடன், மயிலாடுதுறை வள்ளாலகரம், ஜோதி நகர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மின் தாழ்வழுத்த பிரச்னையை போக்கி மின் வினியோகம் சீராக கிடைக்கும் வகையில், அப்பகுதியில் புதிய 63 கேவிஏ மின்மாற்றி நிறுவப்பட்டது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.