Skip to content
Home » பரந்தூர்ல விமான நிலையம் வேண்டாம்- மறு ஆய்வு செய்யுங்க-விஜய் பேச்சு

பரந்தூர்ல விமான நிலையம் வேண்டாம்- மறு ஆய்வு செய்யுங்க-விஜய் பேச்சு

காஞ்சிபுரம் மாவட்டம்  பரந்தூரில்  புதிய விமான நிலையம் அமைக்க  தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விமான நிலையத்துக்கு சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படும்.   அந்த நிலத்தை கையகப்படுத்தினால்   பரந்தூர், ஏகனாபுரம் , நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர்  அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.  மேலும்  விமான நிலயம் அமைய உள்ள இடத்தின்   பகுதி விவசாய நிலமாக உள்ளது. எனவே   விமான நிலையம் அமைக்க இடம் தரமாட்டோம் என கிராம மக்கள் கோரி வருகிறார்கள்.

இதற்காக   இன்று 910வது நாளாக மக்கள்  போராடி வருகிறார்கள்.  இன்று அந்த போராட்ட குழுவினரை  தவெக தலைவர் நடிகர் விஜய்  சந்தித்து பேசுகிறார். அந்த மக்களின் கோரிக்கையை கேட்டறிகிறார். இதற்காக 13 கிராம மக்களும்  பொடவூரில் உள்ள ஒரு  திருமண மண்டபத்திற்கு  வரவழைக்கப்பட்டனர்.  அவர்கள் வெகு நேரம் காத்திருந்ததால்  அவர்களுக்கு  தண்ணீர், பிஸ்கட்  அடங்கிய பொட்டலங்களை   புஸ்சி ஆனந்த் வழங்கினார்.

அவர்களின் முகவரிகளை  ஆய்வு செய்து மண்டபத்திற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.  காலை 10 மணி முதல் மக்கள் அங்கு திரண்டு விட்டனர். இந்த நிலையில்   நடிகர் விஜய் 11 மணிக்கு  பனையூரில் இருந்து  பிரசார வேனில்  பொடவூர் புறப்பட்டார்.. விஜய் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

சரியாக  12.30 மணிக்கு விஜய்  பொடவூா் மண்டபத்தை நெருங்கினார். அப்போது  வேனில் எழுந்து நின்றபடி கைகளை அசைத்தபடி  வந்தார்.   அப்போது அவரை நோக்கி கட்சியின் துண்டுகள் வீசப்பட்டன. அதை எடுத்து போட்டுக்கொண்டார்.  பின்னர்  கையில்  அவரது கட்சி கொடியையும்  பிடித்துக்கொண்டார். அவரது பிரசார வேனை   பின்தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட கார்கள் வந்தது.

விஜயை பார்த்ததும்  அங்கு திரண்டிருந்த மக்கள்  ஆரவாரம் செய்தனர்.  வேன் மண்டபத்திற்குள் புகுந்ததும் மண்டபத்தின் கேட்டை மூடினர்.   வேனில் நின்றபடி  விஜய் பேசினார். அவர் பேசியதாவது:

எல்லாருக்கும்  வணக்கம்,     உங்கள் போராட்டம் குறித்து ராகுல் என்ற சிறுவன்  வீடியோவில் பேசியதை கேட்டேன்.  அந்த பேச்சு என் மனதை ஏதோ செய்தது. எனவே உங்களை சந்திக்கிறேன். 910 நாளாக  நீங்க போராடிக்கிட்டிருக்கீங்க. உங்களுடன்  நான் தொடர்ந்து நின்றபேன்.   வீட்டில் இருக்கும் பெரியவங்க முக்கியமானவங்க. . விவசாயிகள் நாட்டுக்கு முக்கியமானவங்க. உங்க காலடி மண்ண தொட்டு  கும்பிட்டு  என் பிரசாரத்தை தொடங்கணும்முன்னு நினைச்சேன்.  அதற்கு சரியான இடம் இது தான் அதன்படி இங்கிருந்து தொடங்குகிறேன்.   இதுதான் என்னுடய  முதல் கள  பிரசாரம்.

பரந்தூர்  விமான நிலைய திட்டத்தை  கைவிட வேண்டும் என எங்கள்  கட்சி  மாநாட்டில் தீர்மானம் மூலம் வலியுறுத்தினேன். இதற்காக சட்ட போராட்டம் நடத்த தயங்க மாட்டேன்.  உங்களுடன் நிற்பேன்.  நான் இந்த இடத்தில வரக்கூடாது என சொல்கிறேன்.  விமான நிலையம் வேண்டாம் என  சொல்ல வில்லை. இந்த இடத்தில வேண்டாம்.

இயற்கையை அழிப்பதால்,  சென்னையில்  வெள்ளம் வருகிறது. நீர் நிலைகளை அழித்ததால் தான் சென்னைக்கு வெள்ளம் வருகிறது.   இங்கு விமான நிலையம் அமைப்பதை   ஆதரிக்கும் எந்த அரசாக இருந்தாலும் அது மக்கள் விரோத அரசு தான்.   அரிட்டாப்பட்டி தீர்மானத்தை நான் வரவேற்கிறேன்.  அதே நிலைப்பாடு தானே இங்கு எடுக்கணும்.    அரிட்டாபட்டியில் திட்டத்த  எதிர்க்கிறாங்க.  பரந்தூர் விமான நிலையத்தை ஆதரிக்கிறாங்க.  ஏன்? அரிட்டாப்பட்டி போல இதுவும் நம்ம மக்கள் தானே ? இந்த திட்டத்தில அவங்களுக்கு ஏதோ லாபம் இருக்கு. அதை மக்கள் புரிந்து வைத்து உள்ளனர்.

நீங்க  எதிர்க்கட்சியா இருக்கும்போது 8 வழிசாலைய எதிர்த்தீங்க,.   அதே நிலைப்பாடு தானே இப்போ எடுக்கணும்.  இனிமேலும் சொல்கிறேன். உங்க நாடகத்தை பார்த்துக்கிட்டு மக்கள் சும்மா இருக்க மாட்டாங்க.  நம்புற மாறி நாடகம் ஆடுறதுல நீங்க கில்லாடி .  இனி உங்க நாடகத்தை பார்த்துகிட்டு மக்கள்  சும்மா இருக்கமாட்டாங்க.  இதை மறு ஆய்வு செய்யுங்க.  விவசாய நிலையம்  இல்லாத இடத்தை பார்த்து  விமான நிலையம் கொண்டு வாங்க.

வளர்ச்சி தான் நாட்டுக்கு  முக்கியம்.  உங்கள் ஊருக்காக உங்கள் வீட்டு பிள்ளையாக நானும்,  தவெக தோழர்களும், சட்டத்திற்கு உட் பட்டு எல்லா வழிகளுடன்   உங்களுடன் நிற்பேன்.   உங்களை வீடு வீடாக சந்திக்க லாம் என  நினைத்தேன். பர்மிஷன் கிடைக்கல. இங்க தான் பர்மிஷன்   கொடுத்தாங்க.  நான் ஊருக்குள் வர ஏன் தடைன்னு தெரியல.  கொஞ்ச நாளைக்கு முன்னாடி  நம்ம பிள்ளைங்க நோட்டீஸ் கொடுக்க  தடை விதிததாங்க. அது ஏன் என்று  புரியல.  நல்லதே நடக்கும். கான்பிடன்டா  இருங்க.  நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம்.

மீண்டும் , ஏகனாபுரம் ஊருக்குள்  வருவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.  சுமார் 20 நிமிடம் பேசிவிட்டு  அங்கிருந்து  வேனில் நின்றபடி புறப்பட்டு சென்றார்.