திமுக கூட்டணியில் சேர்ந்து கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தவாக தலைவர் வேல்முருகன், கடந்த சிலமாதங்களாக திமுக கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். இதன் வெளிப்பாடாகத்தான் நேற்று அவர் சட்டமன்றத்தில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
பாமகவில், ராமதாஸ், அன்புமணி ஆகியோரை எதிர்த்து தான் இவர் வெளியே வந்து தனிக்கட்சி தொடங்கினார். இப்போது அவர் மீண்டும் பாமகவுடன் நெருக்கத்தை காட்டுகிறார். பாமக வெளியிட்ட வேளாண் நிழல் அறிக்கையை வேல்முருகன் வரவேற்று இருந்தார்.
இந்த நிலையில் நேற்று சட்டமன்ற நிகழ்ச்சிக்கு பிறகு வேல்முருகன், ஒரு தனியார் டிவிக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவர் ‘ முதல்வர் ஸ்டாலின் தான் என்னை இந்த கூட்டணியில் சேர்த்தார். அவரே என்னை நீக்கட்டும். நான் எந்த கட்சியிடமும் பேரம் பேசி சீட் கேட்பவன் அல்ல.
இதே நிலை நீடித்தால் எங்கள் கட்சியின் பொதுக்குழு கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேசி முடிவு செய்வோம்’ என்றார்.
இதன் மூலம் வேல்முருகன் திமுக அணியில் இருந்து போகவேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார். தானாக வெளியேறியது போல இருக்க கூடாது. அப்படி செய்தால் எம்.எல்.ஏ. பதவியை பறிக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே முதல்வராக தன்னை நீக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். இதற்காகவே அவர் சட்டமன்றத்தில் திமுக அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து பேசி வருகிறார். அப்படி செய்தால் தான் தன்னை நீக்குவார்கள் என கருதி அவர் இந்த நிலைப்பாட்டை எடுத்து உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்புடன் கூறப்படுகிறது.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் வேல்முருகன் பாமகவில் சேர்ந்து போட்டியிடலாம். அல்லது தவெகவுடன் கூட்டணி அமைத்து, தனக்கும், தன்னுடன் உள்ள மேலும் பலருக்கு சீட் வாங்கலாம் என்றும் அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.