நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை நிலைய செயலக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தால் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வரும் சிறப்புச் செயலி வாயிலாக உறுப்பினர் சேர்க்கை முகாம்களை மாவட்ட, மாநகர, நகர, பேரூர். ஒன்றிய, ஊராட்சி, வார்டு வாரியாக முழுவீச்சில் நடத்தி, புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். தலைவரின் ஆணையை ஏற்று, இரண்டு கோடி உறுப்பினர்கள் என்று நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவதுதான் நமது முதற்கட்டப் பணியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.