தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிஅளவில் தொடங்கியது.
கூட்டத்தில் பங்கேற்பதற்காக பனையூரில் இருந்து திருவான்மியூருக்கு காரில் வந்த கட்சித்தலைவர் நடிகர் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுக்குழுவில் விஜயின் பெற்றோர் சந்திரசேகர், சோபா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
மேடையில் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மற்றும் மாநில நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர். உறுதிமொழி ஏற்கப்பட்டதும், பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார். அதைத்தொடர்ந்து விஜய் தலைமையில் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.
கூட்டத்தில், மாநில நிர்வாகிகள், மற்றும் மாவட்ட வாரியாக செயலாளர், பொருளாளர், இணைச் செயலாளர், 2 துணைச் செயலாளர்கள் என 5 பேரும், பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேரும் என மாவட்டத்துக்கு 15 பேர் பங்கேற்றுள்ளனர். மேலும், மாவட்டம் தோறும் ஒரு பெண் பிரதிநிதியும் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்கிறார். சுமார் 2500 பேர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கியூ.ஆர். கோடுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
பொதுக்குழுவில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிகிறது. மதியம் 1 மணி வரை பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதைத்தொடர்ந்து மதிய உணவுடன் பொதுக்குழு நிறைவடைய உள்ளது.
பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபம் முன் கரகாட்டம், செண்டைமேளம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் காலையிலேயே நடைபெற்றது.
பொதுக்குழு கூட்டம் தொடங்குவதற்கு முன் மண்டபத்தில் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பொங்கல், பூாி , வடை உள்ளிட்ட சிற்றுண்டி வழங்கப்பட்டது.