நடிகர் விஜய் தொடங்கியுள்ள தவெக கட்சியின் 2ம் அண்டு தொடக்க விழா இன்று செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில் தொடங்கியது. இதற்காக கடந்த ஒரு வாரமாக அந்த சொகுசு விடுதியில் விழாவுக்கான பணிகள் நடந்து வந்தது. மேடை அமைத்தல், பேனர்கள் வைத்தல் உள்ளிட்ட பணிகளை கட்சி நிர்வாகிகள் கவனித்து வந்தனர்.
ஆண்டு விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 3 ஆயிரம் நிர்வாகிகள் நேற்று இரவு முதல் மாமல்லபுரம் வரத் தொடங்கி விட்டனர். இன்று அதிகாலையிலும் நிர்வாகிகள் வந்தனர். அவர்கள் காைடில 9 மணிக்கே மாநாடு நடைபெறும் பகுதியில் அமர வைக்கப்பட்டனர்.
முன் வரிசையில் உள்ள 2 பகுதிகள் மட்டும் காலியாக வைக்கப்பட்டு இருந்தது. விழா நடைபெறும் இடத்துக்கு வரும் நிர்வாகிகள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டது. அதுபோல பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த ஆண்டு விழாவில் கலந்து கொள்ள நடிகர் விஜய் காலை 9.30 மணிக்கு வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார். அதற்குள் விழா நடைபெறும் விடுதி நுழைவு வாயிலில் தாரை தப்பட்டை இசைக்கப்பட்டன. வழி நெடுகிலும் சாலைகளில் தவெக கொடிகள் கட்டப்பட்டு இருந்தது.
ஆண்டு விழாவில் கலந்து கொள்ள இருப்பவர்களுக்கு ஏற்கனவே பாஸ் வழங்கப்பட்டது. அதனை கட்சி நிர்வாகிகள், பவுன்சர்கள் பார்த்து நிர்வாகிகளை உள்ளே அனுப்பினர். 9.50 மணிக்கு விஜய் விழா நடைபெறும் விடுதிக்கு வந்தார். அவரை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். அவருடன் ஆதவ் அர்ஜூனா, பிரசாந்த் கிஷோர் ஆகியோரும் வந்தனர்.
சரியாக 10 மணிக்கு ஆண்டு விழா தொடங்கியது. அப்போது மேடையில் பிரசாந்த் கிஷோருடன் விஜய் கைகோர்ந்து நின்றார். பின்னர் ஆனந்த் பூங்கொத்து கொடுத்து விஜயை வரவேற்றார்.
அதைத்தொடர்ந்து விஜய், பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜூனா, ஆனந்த் ஆகியோர் வரிசையாக நின்று போஸ் கொடுத்தனர். பின்னர் மேடையில் இருந்து அவர்கள் கீழே இறங்கி கெட் அவுட் ஹேஸ்டேக் பேனரை பார்வியட்டு, அதில் கையெழுதர்து போட்டு கெட் அவுட் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர் நிர்வாகிகள் அனைவரும் கையெழுத்து போட்டனர்.
பின்னர் மேடைக்கு வந்த விஜய் நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். அப்போது அனைவரும் எழுந்து நின்று வாழ்த்து கோஷம் போட்டனர். ஆண்டு விழாவின் முதல் நிகழ்ச்சியாக கிடாக்குழி மாரியம்மாளின் கலைநிகழ்ச்சி நடந்தது. கண்டா வரச்சொல்லுங்கள் பாடல் மெட்டில் அவர், விஜயை வாழ்த்தி பாடல் பாடினார். அப்போது விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் கீழே வந்து நாற்காலியில் அமர்ந்தனர்.
மாலை வரை விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவில் விஜய் பேசும்போது முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாக கட்சி நிர்வாகள் கருத்து தெரிவித்தனர்.
இந்த விழாவில் மாற்று கட்சிகளில் இருந்து விலகியவர்கள் தவெகவில் சேர உள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய்க்கு மத்திய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு அளித்த பிறகு அவர் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். ஒய் பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் கருப்பு சபாரி அணிந்து வந்திருந்தனர்.
இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கை, பெண்களுக்கு எதிரான வன்முறை ஆகியவற்றை எதிர்த்து கெட் அவுட்(getout) என்ற கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைக்கவும் உள்ளார்.
மாநாட்டில் அஞ்சலை அம்மாளின் பேத்தி கலா பாரதி, கொள்ளுப்பேத்தி முத்தரசி ஆகியோரும் பங்கேற்றனர்.