கோவை மாவட்டத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்கு நேற்று வந்த பிரதமர் மோடி, 1998 கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பான புகைப்படங்களை ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, கோவை பயங்கரவாத குண்டுவெடிப்பு சம்பவத்தை ஒருபோதும் மறக்க முடியாது என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவை மேற்கோள் காட்டி அமைச்சர் மனோ தங்கராஜ் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர்: “இதே போல, குஜராத் கலவரத்தில் இறந்தவர்கள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள், ஒக்கி புயலில் இறந்தவர்கள், மணிப்பூர் கலவரத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்?
10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் 7.5 லட்சம் கோடி ஊழலும், 8 ஆயிரம் கோடி தேர்தல் பத்திர மோசடியையும் தவிர தாங்கள் சாதித்ததாக சொல்லிக்கொள்ள வேறெதுவும் இல்லை. அதனால் வழக்கம் போல மத வெறுப்புணர்வை தூண்டும் இறுதி அஸ்திரத்தை தேர்தல் ஆயுதமாக மோடி கையில் எடுத்துள்ளார். இது இந்த தேர்தலில் எடுபடாது.” இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.