அரசு பள்ளிகளில் படித்து பின்னர் அரசு கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 அரசு வழங்கி வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்தவர்களுக்கும் இந்த திட்டத்தை விரிவு படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதை ஏற்று உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை படித்து அரசு கல்லூரிகளில் சேரும் பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன் தொடக்க விழா இன்று தூத்துக்கடி காமராஜர் கல்லூரியில் நடந்தது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது:
பல்லாயிரகணக்கான மாணவிகளை ஒரே இடத்தில் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என் அன்பிற்கும், பாசத்திற்கும் உரிய மகள்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
ஒரு காலத்தில் பெண்கள் வீட்டில் தான் இருக்கணும் , படிக்க கூடாது, வேலைக்கு செல்லக்கூடாது என்ற நிலைஇருந்தது. 50, 100 ஆண்டுகளுக்கு முன் 2 சதவீத பெண்களுக்கு தான் எழுத படிக்கத் தெரியும். பெண்கள் படிக்க அப்போது தடைகற்கள் இருந்தது. பிற்போக்குத்தனம் இருந்தது. மூடநம்பிக்கை காரணமாக பெண்களை படிக்க அனுப்பவில்லை.
ஆனால் இப்போது உயர் கல்வியில் தமிழகம் தான் டாப். வேலைக்கு செல்லும் பெண்களில் தமிழகம் தான் டாப். பெரியார் அவர்கள் நினைத்த காட்சி தான் இது. யாரையும் எதிர்பார்க்காமல் பெண்கள் தங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும். என பெரியார் கூறினார். கல்வி கனவை எல்லோருக்கும் தந்தது நீதிக்கட்சி ஆட்சி. கட்டாய கல்வியை சட்டமாக்கியதும் நீதிக்கட்சி ஆட்சி தான். பெண்களுக்கு சட்டாய கல்வி தந்து நிதி உதவியும் அளித்தது நீதிக்கட்சி ஆட்சி. கல்விப்புரட்சிக்கு அடித்தளம் அமைத்தது நீதிக்கட்சி ஆட்சி.
‘சிலர் அறியாமையில் கேட்கிறார்கள் திராவிட ஆட்சி என்ன செய்தது என்று? அதற்காக இதை சொல்கிறேன்.
அதன் பிறகு பெருந்தலைவர் காமராஜர் தமிழகம் முழுவதும் பள்ளிக்கூடங்களை திறந்தார். கலைஞா் ஆட்சியில் அதிக கல்லூரிகள் திறக்கப்பட்டன. திமுக ஆட்சி ஏற்படும் வரை தமிழ்நாட்டில் 68 கல்லூரிகள் தான் இருந்தது. 69 முதல் 75 வரை 97 கல்லூரிகளை திறந்தார் கலைஞர். அத்துடன் பியூசி வரை இலவச கல்வியை கொடுத்தோம். பல பல்கலைக் கழகங்கள் உருவாக்கினோம். மருத்துவ கல்லூரிகளை உருவாக்கினோம். ஆராய்ச்சி படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
பெண்கள் கல்விக்காக பல முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டன. இதுவரை விடியல் பயணத்தின் மூலம் 527 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதுமைப்பெண் திட்டத்தால் அரசு கல்லூரிகளில் கூடுதலாக மாணவிகள் சேருகிறார்கள். இதன் மூலம் இந்த திட்டத்தின் நோக்கம் நிறைவேறியது. இதில் எந்த தடை வந்தாலும் அதை உடைப்பேன்.
பெண்களுக்கு மட்டும் தான் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுமா எங்களுக்கு இல்லையா என மாணவர்கள் கேட்டார்கள். மத்திய அரச ஒத்துழைப்பு தராத நிலையிலும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்தேன். இன்று தொடங்கும் திட்டத்தின் மூலம் 75 ஆயிரம் மாணவிகள் பயனடைவார்கள்.
ஒரு ஆண் கல்வி கற்றால் அது கல்வி வளர்ச்சி. பெண் கல்வி கற்றால் அது சமுதாய புரட்சி. தமிழ் நாட்டில் உயர் கல்வி பெறாத பெண்களே இல்லை என்ற நிலையை உருவாக்காமல் நான் ஓயமாட்டேன்.
தமிழ்நாடு அரசு உருவாக்கிய நான் முதல்வன் திட்டத்தை பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் பாராட்டினார்கள். பாரதி கண்ட கனவை நிறைவேற்றி உள்ளது திராவிட மாடல் அரசு.ஏழை எளிய மாணவர்களின் கல்வி கனவை நனவாக்கியது திராவிட மாடல் அரசு
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், அன்பில் மகேஸ் மற்றும் தலைமை செயலாளர் முருகானந்தம், கனிமொழி எம்.பி, மேயர் ஜெகன், அரசு செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், கலெக்டர் இளம் பகவத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.