Skip to content
Home » 46ஆயிரம் பேர் பலி….துருக்கி, சிரியா நிலநடுக்கம்…. மீட்புபணிகள் நிறைவு

46ஆயிரம் பேர் பலி….துருக்கி, சிரியா நிலநடுக்கம்…. மீட்புபணிகள் நிறைவு

துருக்கியில் கடந்த 6-ந் தேதி அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது. துருக்கியின் 10 மாகாணங்களை நிலநடுக்கம் உருக்குலைத்துவிட்டது. வானளவுக்கு கம்பீரமாக உயர்ந்து நின்ற ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் கட்டிட குவியல்களாக மாறிப்போயின. இந்த துயரம் துருக்கி மட்டும் இன்றி அண்டை நாடான சிரியா வரை நீண்டது. அங்கும் நிலநடுக்கத்தின் பாதிப்பால் பல ஆயிரம் கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாத அளவுக்கு தரைமட்டமாகின.

இந்த நிலநடுக்கத்தால் இருநாடுகளிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பறிபோயின. பல லட்சம் மக்கள் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாகினர். இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட அந்த இருநாடுகளுக்கும் உலக நாடுகள் அனைத்தும் உதவிக்கரம் நீட்டின. அதன்படி இந்தியா உள்பட பல நாடுகளில் இருந்து சென்ற பேரிடர் மீட்பு குழுவினர் இரு நாடுகளையும் சேர்ந்த மீட்பு குழுக்களுடன் இணைந்து, கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

Also Read – சிரியாவில் தொடரும் சோகம்: இஸ்ரேல் வான்தாக்குதலில் 15 பேர் பலி இதன்பலனாக நிலநடுக்கம் ஏற்பட்ட பல நாட்களுக்கு பிறகும் கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் இருந்து பச்சிளம் குழந்தைகள், சிறுவர்கள், சிறுமிகள் உள்பட ஏராளமானோர் மீட்கப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரிகைக்கு பேட்டியளித்த துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் இடிபாடுகளில் இருந்து 8 ஆயிரம் உயிருடன் மீட்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தார். அந்த வகையில் நிலநடுக்கம் ஏற்பட்டு 13 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் துருக்கியின் அந்தாக்யா நகரில் கட்டிட இடிபாடுகளில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அதே பகுதியில் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து கணவன், மனைவி மற்றும் குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், துரதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்ட சிறிது நேரத்தில் குழந்தை இறந்துவிட்டது. இதனிடையே துருக்கியில் இதுவரை நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40,642 ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல் சிரியாவில் பலி எண்ணிக்கை 5,800 ஐ கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் நிலநடுக்கத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 2 வார காலமாக தீவிர மீட்பு பணிகள் நடந்து வந்த துருக்கியில் நேற்று மாலையுடன் மீட்பு பணிகள் நிறைவடைந்தன. இது குறித்து துருக்கி பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையத்தின் தலைவர் யூனுஸ் சேசர், கூறுகையில், “நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணி பெரும்பாலான மாகாணங்களில் முடிவடைந்துள்ளது. நாளை இரவுக்குள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முழுவதுமாக முடித்துவிடுவோம் என நம்புகிறோம். நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மொத்தம் 4,30,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்” என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!