தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்து பொங்கல் வைத்து விழாவை தொடக்கி வைத்தார். இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் மகேஸ்வரி, மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி மற்றும் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
விழாவை ஒட்டி மாநகராட்சி அலுவலகத்தில் ஊழியர்களுக்கு கோலப்போட்டி, ஸ்லோ சைக்கிள் ரேஸ், இசை நாற்காலி உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பொங்கல் விழாவின் முத்தாய்ப்பாக கயிறு இழுத்தல் போட்டி நடந்தது. இதில் துணை மேயர் அஞ்சுகம், ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் தலைமையில் பெண்கள் ஒரு புறமும், மேயர் தலைமையில் சண் ராமநாதன் தலைமையில் ஆண்கள் ஒருபுறமுமாக நின்று கயிறை இழுத்தனர்.
அந்த கயிறு இத்துப்போன கயிறாக இருந்ததால் ‘ஒரே தம்’ மில் கயிறு இரண்டாக அறுந்தது. இதனால் இரு தரப்பினரும் குப்புற விழுந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் ரத்த காயம் ஏற்படவில்லை. கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்ற கதையில் அனைவரும், யாரும் பார்க்கலியே என்று மனதுக்குள் கேட்டபடி தூசியை தட்டிவிட்டு நமட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டனர்.