அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.வான இவர் தற்போது ஓபிஎஸ் அணியில் உள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் சென்னையில் சில நாட்கள் சிகிச்சை பெற்ற நேற்று ஒரத்தநாடு அடுத்த தனது சொந்த ஊரான தெலுங்கன்குடிகாடு என்ற கிராமத்திற்கு வந்தார்.
இந்த நிலையில் அவரை நேற்று மாலை 6 மணி அளவில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வைத்திலிங்கத்தை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். சுமார் 30 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது. பின்னர் டிடிவி தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:
எடப்பாடி பழனிச்சாமிடம் இரட்டை இலை உள்ளதால் அம்மாவின் கட்சி பலவீனம் ஆகி கொண்டுள்ளது. அம்மாவின் கட்சிக்கு தேர்தலுக்கு பிறகு பழனிச்சாமி மூடு விழா நடத்தி விடுவார். அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி அமைப்பார்கள். பழனிச்சாமி இடமுள்ள தொண்டர்களும் நிர்வாகிகளும் விழித்துக் கொள்ளவில்லை என்றால் தேர்தலுக்குப் பிறகு அதை மீட்கின்ற பொறுப்பு எங்களிடம் வரும் . இரண்டு அரசியல் தலைவர்கள் சந்திக்கும் போது அரசியல் பேசாமலா இருந்திருப்போம் .
இவ்வாறு அவர் கூறினார். அவர் பேட்டிக்கொடுத்துக்கொண்டிருந்தபோது சசிகலாவும் அங்கு வருவதாக தகவல் கிடைத்தது. உடனடியாக தினகரன் பேட்டியை முடித்துக்கொண்டு புறப்பட்டு சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில் சசிகலா தனது தம்பி திவாகரனுடன் அங்கு வந்து வைத்திலிங்கத்தை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் சசிகலா கூறியதாவது:
இந்த சந்திப்பு என்பது அனைத்தும் கலந்தது. இந்த இயக்கம் மக்களுக்காக ஆரம்பித்தது. திமுக போல் இல்லை. நல்ல ஆட்சி 2026ல் கொடுப்போம். அது மக்களாட்சியாக இருக்கும்.
அதிமுக என்பது பொதுமக்கள் மற்றும் ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி.
2026ல் எல்லோரும் ஒன்றிணைந்து நல்லபடியாக ஆட்சி அமைத்து, அது தலைவர், அம்மா வழியில் மக்களுக்கு பிடித்த ஆட்சியாக இருக்கும்.
எங்கள் சட்டதிட்ட விதிகள் படி எங்கள் அடிமட்ட தொண்டன் என்ன முடிவு செய்கிறார்களோ அதுதான் இந்த கட்சியின் சட்ட விதிப்படி நடக்கும். அதை நாங்கள் நல்லபடியா செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.