கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள வெள்ளியங்காடு வாட்டர் போர்டு பகுதியைச் சேர்ந்த டிடிஎப் வாசன் என்ற வைகுண்ட வாசன் (25). Twin throttlers என்ற யூடியூப் சேனலை டிடிஎப் வாசன் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த பைக்கை கொண்டு, சாகசங்கள் செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்துள்ளார். இவருக்கு 20 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்ஸ்கள் உள்ளனர். இந்த நிலையில் பிரபல தனியார் யூடியூப் செய்தி சேனலான இந்தியா கிளிட்ஸ் செய்தியாளர் அய்யப்பன் ராமசாமி என்பவரை தரக்குறைவாக பேசி, கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் டிடிஎப் வாசன் வீடியோ ஒன்றை அவரது யூடியூப் தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், 45 ஆயிரம் பணம் வாங்கிட்டு, திரியுறவன எல்லாம் விட்டுறுவானுங்க. அந்த நாய்க்கு மரியாதையே கிடையாது. வெறியோட வெயிட் பண்றேன். கைல சிக்கனா மூஞ்சி முகரை எல்லாம் உடைப்பேன்” என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக காரமடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் விஜயராஜ் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் டிடிஎப் வாசன் மீது இரண்டு பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அய்யப்பன் ராமசாமி பேட்டி எடுத்த போது அவரது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் டிடிஎப் வாசன் பாதியில் கிளம்பிச் சென்றதும், தற்போது அய்யப்பன் ராமசாமி பணம் வாங்கியதாக சர்ச்சையில் சிக்கிய நிலையில் அதற்கு பதிலடியாக டிடிஎப் வாசன் வீடியோ வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.