பட்டுக்கோட்டை அருகேயுள்ள கழுகபுலிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு ரவுடிப் பட்டியலில் இருக்கும் ஜேம்ஸ் மீது, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இவரின் மனைவி பர்வீன் பானு. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் 13-ம் தேதி ஜேம்ஸுக்கும் பர்வீன் பானுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஜேம்ஸ், பர்வீன் பானுவைத் தாக்கியிருக்கிறார். இதில் பர்வீன் பானுவுக்குக் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், ஜேம்ஸை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இதனால் ஜேம்ஸை ஜாமீனில் எடுக்க அவரது தாய் ஆரோக்கியமேரி முயற்சி செய்து வந்திருக்கிறார். இதையறிந்த பர்வீன் பானு, நேற்று முன்தினம் இரவு தன்னுடைய மாமியார் ஆரோக்கிய மேரியிடம், வந்து ஜேம்ஸ்சை ஜாமீனில் எடுக்கும் முயற்சியைக் கண்டித்துள்ளார். அதற்கு ஆரோக்கியமேரி அப்படித்தான் எடுப்பேன் என்று பதில் அளித்துள்ளார்
இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறியது. அதனால் ஆத்திரமடைந்த பர்வீன் பானு வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து ஆரோக்கிய மேரியின் கழுத்து, முகம் ஆகிய பகுதிகளில் வெட்டியிருக்கிறார். அதன் பிறகும் ஆத்திரம் அடங்காதவர், ஆரோக்கிய மேரி தலையைப் பிடித்து தரையில் மோதி, கொலை செய்தார்.
இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த பட்டுக்கோட்டை போலீஸார் பர்வீன் பானுவை கைதுசெய்துள்ளனர். இந்தக் கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா எனவும் போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.