தமிழக அமைச்சரவை பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று 3வது முறையாக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் நீக்கப்பட்டார். புதிதாக நியமிக்கப்பட்ட மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா இன்று அமைச்சராக பதவியேற்றார். அவர் பேண்ட் , சட்டை அணிந்து வந்திருந்தார்.
கவர்னர் மாளிகையில் உள்ள தா்பார் மண்டபத்தில் இன்று காலை 10.30 மணிக்கு இதற்கான விழா நடந்தது. சுமார் 250 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் அனைவரும் வந்திருந்தனர். தலைமைச்செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, எம்.பிக்கள், டிஆர்பி ராஜா குடும்பத்தினர் மற்றும் உயர் அதிகாரிகள் வந்திருந்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சரியாக 10.25 மணிக்கு வந்தார். அதைத்தொடர்ந்து கவர்னர் ஆர்.என். ரவி தர்பார் மண்டபத்துக்கு10.30 மணிக்கு வந்ததும் முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதைத்தொடர்ந்து விழா தொடக்கமாக தேசிய கீதம் பாடப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. பின்னர்பதவியேற்பு விழா தொடங்கியது. கவர்னர் ரவி,
டிஆர்பி ராஜாவுக்கு பதவி ஏற்பு உறுதிமொழி, ரகசிய காப்பு உறுதிமொழி செய்து வைத்தார். முன்னதாக தலைமை செயலாளர் இறையன்பு, பதவிப்பிரமாணம் செய்து வைக்கும்படி கவர்னரை அழைத்தார். அந்த அழைப்பை ஏற்று கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் ராஜா அமைச்சராக பதவிஏற்றதற்கான கையெழுத்திட்டார். பின்னர் கவர்னர், முதல்வருடன் ராஜா போட்டோ எடுத்துக்கொண்டார். பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். நிறைவாக தேசியகீதம் பாடப்பட்டு சுமார் 15 நிமிடத்தில் விழா நிறைவு பெற்றது.அதைத்தொடர்ந்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கவர்னருடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.
பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டதை தொடர்ந்து அந்த துறை, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வசம் ஒப்படைக்கப்படுகிறது. தகவல் தொழில் நுட்பத்துறை இலாகா, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வசமும், நிதித்துறை தங்கம் தென்னரசுவிடமும், தொழில் துறை டிஆர்பி ராஜாவிடமும் ஒப்படைக்கப்படும் என கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.