அகில இந்திய அளவிலான (தேசிய) போலீசாருக்கான 73 ஆவது தடகளப் போட்டிகள் டெல்லியில் நடைபெற்றன. இதில் திருச்சி மத்திய மாவட்ட காவல்துறையில் உள்ள திருச்சி மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த காவலர் அரவிந்த் என்பவர் 110 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் பங்கேற்று 5 ம் இடத்தையும், அரியலூர் மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த காவலர் குழந்தைவேலு என்பவர் குண்டு எறிதல் போட்டியில் 12 ஆவது இடமும், திருச்சி மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த காவலர் தர்ஷன் என்பவர் ஈட்டி எறிதல் போட்டியில் 17 ஆவது இடமும் பெற்றனர்.
அதேபோல லால்குடி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சுந்தர் என்பவர் மும்முறை தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டு 7 ஆவது இடத்தை பெற்றுள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டில் இதே போட்டியில் வெள்ளிப் பதக்கமும், ரூ.3 லட்சம் ரொக்க பரிசும் வென்றுள்ளார். மேலும் 2019 ம் ஆண்டு வெண்கல பதக்கமும் வென்றது குறிப்பிடத்தக்கது. இதற்கான பரிசு தொகை தற்போது டில்லியில் நடைபெற்ற 73 வது அகில இந்திய போலீசாருக்கான தடகள போட்டியின் போது அளிக்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற காவலர்களை திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ஜி. கார்த்திகேயன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
