திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக க. ஜோஷி நிர்மல்குமார் திங்கள்கிழமை பொறுப்பேற்றா. இவர் தமிழக காவல்துறையில் கடந்த 2002}ஆம் ஆண்டு துணை காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார். தொடர்ந்து திருப்பூர், ஓசூர், தர்மபுரி, பவானி மற்றும் நபஊ ஈரோடு ஆகிய இடங்களிலும், கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும் சேலம் நகர மதுவிலக்கு அமல் பிரிவிலும் பணியாற்றினார். காவல் கண்காணிப்பாளராக கரூர், திருவண்ணாமலையிலும், துணை ஆணையராக சென்னை சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரிவு, இணை ஆணையராக சென்னை வடக்கு மண்டலம், திண்டுக்கல் சரகத்தில் காவல்துறை துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.
தொடர்ந்து காவல்துறை தலைவராக (ஐஜியாக) 2020 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்று காவல் தலைமையகம், நிர்வாக துறை, தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் மற்றும் குற்றப்புலனாய்வு துறை ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். இதற்கு முன்பு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையில் காவல்துறை தலைவராக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றியுள்ள ஜோஷி நிர்மல்குமார், தற்போது திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுள்ளார். தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.
மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட 9 மாவட்டங்களிலும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க இந்த 2025 புத்தாண்டில் முக்கியத்துவம் தரப்படும். கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருள்களை கடத்துதல், பதுக்குதல், சட்ட விரோதமாக விற்பனை செய்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், மணல்கடத்தல், கள்ளச்சாராயம் மற்றும் லாட்டரி விற்பனை உள்ளிட்ட குற்றச்செயல்களை குறைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இணையவழி மோசடிக் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்து பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொதுமக்கள், காவல் நிலையங்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் அளிக்கும் புகார் மனுக்கள் மீது முறையாக விசாரணை நடத்தி தீர்வு காணவும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.