Skip to content

நிலத்தகராறில் திருச்சி வாலிபர் கொலை.. அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை

திருச்சி மாவ ட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் பனையபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேம்புராஜ்-சூரியகலா தம்பதியரின் மூத்த மகன் நவீன்தேவா (30). காதல் மணம் புரிந்த இவர் தனது மனைவியுடன் திருச்சி பாலக்கரை பகுதியில் குடியிருந்து வந்தார். நவீன்தேவா குடும்பத்தினருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து குடும்பத்தினருக்கும் நிலத்தகராறும் அது தொடர்பாக முன்விரோதமும் இருந்து வந்துள்ளது. இந் நிலையில் கடந்த 1-3-2020 அன்று தனது தாயாருக்கு பணம் கொடுப்பதற்காக நவீன்தேவா பனையபுரத்துக்கு சென்று இருந்தார். பணம் கொடுத்துவிட்டு இரவு 8.30 மணிக்கு வீட்டுக்கு திரும்பும் போது, மாரிமுத்துவின் மகன்கள் ஆனந்தன்(30), அறிவழகன் (28) இருவரும் நவீன்தேவாவை வழிமறித்து தகராறு செய்து தாக்கி, அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் படுகாயம் அடைந்த நவீன்தேவாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர், இருநாட்கள் கழித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நெ.1 டோல்கேட் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தன், அறிவழகன் இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட 2 ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்கள், விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் குற்றம் உறுதியானதையடுத்து ஆனந்தன், அறிவழகன் இருவருக்கும் ஆயுள்தண்டனையும் தலா ரூ.5000 அபராதமும் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறைதண்டனை அனுபவிக் வேண்டும் என நீதிபதி பி. சரவணன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞர் பாலசுப்பிரமணியன் ஆஜரானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!