திருச்சி அடுத்த குழுமணி கோப்பு பகுதியைச் சோ்ந்தவா் ஏ. நாகராஜ் (28). இவா் மீது திருச்சி மாவட்டத்தின் பல காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 2 தினங்களுக்கு முன் நாகராஜை திருச்சி மாவட்ட தனிப்படை போலீஸாா் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் எங்கு வைத்துள்ளனா் என்ற விவரம் உறவினா்களுக்கு தெரியவில்லை. இதுகுறித்து நாகராஜின் மனைவி ஹேமா மற்றும் குடும்பத்தினா் காவல் நிலையங்களில் விசாரித்த போது அவரை போலீசார் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டனர்.
இந்த நிலையில் நாகராஜை, போலீசார் என்கவுண்டர் செய்து விடுவார்கள் என்ற பயத்தில் அவரது குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் உள்ளிட்ட சுமாா் 100 போ், நேற்று இரவு திருச்சி காஜாமலையில் உள்ள கலெக்டர் பங்களா முன் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாகராஜை தற்போது எந்த வழக்கிலும் ஈடுபடுவதில்லை. அவரை போலீசார் என்கவுன்டர் செய்யப்போகிறார்கள். அவைர விடுவிக்க வேண்டும் என்று கோஷம் போட்டனர். தகவல் அறிந்து வந்த கே. கே. நகர் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதுழ நாகராஜை திருச்சி மாவட்ட போலீசார் பிடிக்கவில்லை. அவர் போலீஸ் கஸ்டடியிலும் இல்லை எனக்கூறி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அங்கு சுமார் 1 மணி நேரம் பரபரப்பு நிலவியது.