இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அரியமங்கலம் அம்மாகுளம் கிளைச் செயலாளராக தவ்பிக் என்பவர் செயல்பட்டு வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் பி ஜே.பி கட்சியை சேர்ந்த வினோத் . இவர் மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர் டூவீலர் திருட்டு மற்றும் போதை பொருள் விற்பனையில் சம்பந்தப்பட்டவர்கள் என அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
கஞ்சா விற்பனைக்கு எதிராக தவ்பிக் குரல் கொடுத்து வருகிறார். அந்த பகுதியில் போதை பொருள் விற்பவர்கள் பற்றி போலீசுக்கும் தகவல் தெரிவித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தவ்பிக் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த பொழுது பிஜேபி பிரமுகரான வினோத் தனது கூட்டாளிகள் அரிவாளுடன் வந்து தவ்பிக்கை சுற்றி வளைத்து வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதில் படுகாயமடைந்த தவ்பிக்கை பொதுமக்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் லெனின் தலைமையில் வினோத் மற்றும் கூட்டாளிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீரென திருச்சி அரசு மருத்துவமனை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து காவல் துறையினர் அவர்களுடன் சமாதான பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தத்தை அடுத்து சாலை மறியலை கைவிட்டனர். தவ்பிக் போதை பொருட்கள் விற்பனைக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தார்.
அப்பகுதியில் பல்வேறு மக்கள் பணியில் ஈடுபட்டு வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத பிஜேபி கட்சியை சேர்ந்த வினோத் மற்றும் அவருடன் உள்ள சமூக விரோத கும்பலே இத்தகைய கொடூர செயலை செய்திருக்கிறார்கள் . எனவே காவல்துறை உடனடியாக சம்பந்தபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். தமிழக அரசு மக்கள் சேவையில் ஈடுபட்டுவந்த தவ்பிக்கு உரிய மேல் சிகிச்சை வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.