கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமசேரி பகுதியில் உள்ள ஜம்ரா சர்வதேச மையத்தில் கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி யேகோவா சாட்சிகளின் மாநாடு தொடங்கியது. காலை 9.30 மணி அளவில் மாநாடு நடந்த மண்டபத்தில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தன. இதில் சம்பவ இடத்தில் ஒரு பெண் இறந்தார். 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து பலி எண்ணிக்கை 5 ஆனது.
இந்த சம்பவம் தொடர்பாக கேரளாவை சேர்ந்த மார்ட்டின் என்பவர் கைது செய்யப்பட்டார். தனக்கு யேகோவா சாட்சிகள் அமைப்பு மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் கொள்கை பிடிக்காததால் குண்டு வைத்ததாக கூறினார்.இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீசார் மட்டுமின்றி என்ஐஏ விசாரணையும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் யேகோவா சாட்சிகளின் மாநாடு திருச்சி ஜங்ஷன் அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள எல்கேஎஸ் மகாலில்
இன்று காலை தொடங்கியது. முன்னதாக இந்த மாநாடு அரங்கை திருச்சி காவல்துறையின் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். மாநாட்டுக்கு வந்தவர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதிக்கப்பட்டனர். இது தவிர யேகோவா சாட்சிகள் அமைப்பினரே பல்வேறு கட்ட சோதனைகளை நடத்தியே மாநாட்டுக்குள் அனுமதித்தனர்.
விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகளை சோதனை செய்யும் ஸ்கேனர் கருவி இந்த மண்டபத்திலும் பொருத்தப்பட்டு இருந்தது. அனைத்து உடமைகளும், இந்த ஸ்கேனரில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அத்துடன் மாநாட்டுக்கு வந்திருந்த 1300 பேரின் சாப்பாடு, உடைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தனியாக ஒரு இடத்தில் வைக்கப்பட்டு டோக்கன் கொடுக்கப்பட்டது. அவையும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.
மாநாட்டு அரங்கில் செல்பவர்கள் பைபிள் மற்றும் பாடல் புத்தகம் மட்டுமே எடுத்து சென்றனர். 3 நாள் நடைபெறும் மாநாட்டிலும் இதுபோல கடுமையான சோதனைகள் நடைபெறும் என மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.