திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் எஸ்.ஐயாக இருப்பவர் மேனகா. இவரை தா. பேட்டைக்கு மாற்றினர். ஆனால் அவர் அங்கு செல்லாமல், மாறுதல் உத்தரவை ரத்து செய்து விட்டு மண்ணச்சநல்லூரிலேயே பணியில் தொடர்கிறார். அந்த அளவுக்கு இவர் காவல் துறையில் அதிகார பலத்துடன் இருப்பதாக சக காவலர்கள் கூறுகிறார்கள்.
பொதுவாக மேனகா, திருச்சி மாவட்ட போலீஸ் அதிகாரிகளின் உத்தரவுகளை மதிப்பதில்லை. எங்கும் பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டால் அங்கு செல்வதில்லை. தனக்கு வசதியாக இருந்தால் மட்டும் தான் அங்கு செல்வார், இல்லாவிட்டால் செல்லமாட்டார் என்றும் இவரைப்பற்றி புகார்கள் உண்டு.
இந்த நிலையில் இன்று முதல் 1ம் தேதி காலைவரை மேனகாவுக்கு பசும்பொன்னில் டூட்டி போடப்பட்டு இருந்தது. ஆனால் அங்கு செல்ல மறுத்த மேனகா தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு ஆஸ்பத்திரியில் சேர்ந்து விட்டார். இதனால் பசும்பொன் செல்லவில்லை.
இதுகுறித்து உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மேனகா, பசும்பொன் செல்லாமல் தவிர்க்கவே, தூக்க மாத்திரைகள் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்தும் உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.