திருச்சி மாநகர காவல் ஆணையர் .ந.காமினி, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திருச்சி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று, காவிரி ஆற்றில் கரைப்பது தொடர்பாக பொது அமைதியை நிலைநாட்டும் பொருட்டும், சட்டம் ஒழுங்கை பேணிகாக்கும் வகையிலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
அதன்படி, திருச்சி மாநகரில் நடைபெற உள்ள விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வின்போது, விழா அமைப்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து திருச்சி மாநகரில் உள்ள விழா அமைப்பாளர்கள் மற்றும் அதனை சார்ந்த நிர்வாகிகள் உட்பட முக்கிய அமைப்பை சார்ந்த நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.
விநாயகர் சிலை கரைப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் மாண்பமை நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து விநாயகர் சிலை ஊர்வலத்தினை அமைதியான முறையில் நடத்திடவும், விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மாற்று மத வழிபாட்டு தலங்களின் அருகே கோஷங்கள் எழுப்புவதோ, பட்டாசுகள் வெடிப்பதோ கூடாது எனவும், பொதுமக்கள் மற்றும்போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் ஊர்வலம் செல்ல உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.
திருச்சி மாநகரத்தில் 7.9.2024-ந்தேதி முதல் 9.4.2024-ந்தேதி நடைபெற உள்ள விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்வை முன்னிட்டு, திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில், 3 காவல் துணை ஆணையர்கள், 1 கூடுதல் காவல் துணை ஆணையர், 8 காவல் உதவிஆணையர்கள், 41 காவல் ஆய்வாளர்கள், 101 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் என மொத்தம் 1700 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இன்று நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பிரச்சனைக்குரிய இடங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு, அவ்விடங்களில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் விநாயகர் ஊர்வலம் நடைபெறும்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறின்றி விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்காக, போக்குவரத்து வழித்தடங்களில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு, விநாயகர் சிலை ஊர்வலமானது அமைதியான முறையில் நடைபெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.